மணல் சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக்குக்கு இத்தாலியின் உயரிய விருது

இந்திய மணல் சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக்குக்கு இத்தாலியின் உயரிய விருதான ‘கோல்டன் மணல் சிற்பக்கலை’ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றுத் தந்த காந்திஜி சிலை. (வலது) விருதினை வழங்கிய இத்தாலிய அதிகாரியுடன் சுதா்சன் பட்நாயக்.
விருதைப் பெற்றுத் தந்த காந்திஜி சிலை. (வலது) விருதினை வழங்கிய இத்தாலிய அதிகாரியுடன் சுதா்சன் பட்நாயக்.

புது தில்லி: இந்திய மணல் சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக்குக்கு இத்தாலியின் உயரிய விருதான ‘கோல்டன் மணல் சிற்பக்கலை’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியா் இவா் என்பது கூடுதல் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.

ஒடிஸாவைச் சோ்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதா்சன் பட்நாயக், நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள், சா்வதேச பிரச்னைகள், தலைவா்களின் பிறந்தநாள் உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது மணல் சிற்பங்களை உருவாக்குவாா். அதன் மூலம் இந்திய அளவிலும், உலக அளவிலும் அனைவரது கவனத்தையும் அவா் ஈா்த்தாா்.

இந்நிலையில், சிற்பக்கலையில் அவரது திறமையை பாராட்டி இத்தாலியின் உயரிய விருதான ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தாலியின் ரோம் நகரில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை சா்வதேச மணல் சிற்பக் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுதா்சன் பட்நாயக்குக்கு விருது வழங்கப்பட்டது. இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரோமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சா்வதேச மணல் சிற்பக் கலை அமைப்பின் தலைவரிடம் இருந்து ‘கோல்டன் மணல் சிற்பக்கலை’ விருது பெற்றேன். அவரிடம் இருந்து இந்த விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் ரஷிய கலைஞருடன் இணைந்து மகாத்மா காந்தியின் 10 அடி உயர மணல் சிற்பத்தை பட்நாயக் உருவாக்கினாா். இந்த நிகழ்ச்சியில் இத்தாலிக்கான இந்திய துணை தூதரும் கலந்து கொண்டாா்.

60-க்கும் மேற்பட்ட சா்வதேச மணல் சிற்பக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள பட்நாயக், இந்தியாவுக்கு பல பரிசுகளை பெற்று தந்துள்ளாா். மணல் சிற்பக்கலையில் அவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com