மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து சோனியாவுடன் பேசவே இல்லை: போட்டு உடைத்த பவார்!

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து சோனியா காந்தி உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து சோனியா காந்தி உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு அமைவதில் இழுபறி நீடித்து வந்ததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனை, அங்கு அரசு அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதையடுத்து, சரத் பவார் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

"மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். நான் அதுகுறித்து அவரிடம் விவரித்தேன். இந்த சந்திப்பின்போது ஏகே அந்தோணியும் உடன் இருந்தார். மகாராஷ்டிராவில் நிலவும் சூழலை நாங்கள் கண்காணித்துக் கொண்டே இருப்போம். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்" என்றார். 

சிவசேனையுடன் கூட்டணி அமைக்க சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், 

"இந்த சந்திப்பின்போது அரசு அமைப்பது குறித்து பேசவே இல்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குறித்து மட்டுமே இந்த சந்திப்பில் முழுவதுமாக பேசப்பட்டது" என்றார்.

170 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனை கூறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், 

"இந்த 170 குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சிவசேனையிடம்தான் இதை நீங்கள் கேட்க வேண்டும்" என்றார்.

இவர் இப்படி தெரிவித்துள்ள நிலையில், சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தற்போது சரத் பவார் இல்லத்துக்கு விரைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com