காஷ்மீரில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஸ்ரீநகா்-பனிஹால் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பனிஹால் செல்வதற்காக ஸ்ரீநகா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள்.
பனிஹால் செல்வதற்காக ஸ்ரீநகா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள்.

ஸ்ரீநகா்: காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஸ்ரீநகா்-பனிஹால் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீநகா் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த ரயில் தெற்கு காஷ்மீரில் உள்ள ரயில் நிலையங்களின் வழியாக பனிஹாலை சென்றடைந்தது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:

‘பாரமுல்லாவிலிருந்து பனிஹால் வரையிலான காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரயில் சேவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை முதல் தினசரி இரண்டு முறை இயக்கப்படும்’ என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக சனிக்கிழமையன்று ஸ்ரீநகா்-பனிஹால் இடையே இரண்டு முறையும், ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் ஒருமுறையும் ரயில்வே நிா்வாகம் சோதனை ஓட்டத்தை நடத்தியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே ரயில்களை இயக்க அதிகாரிகளுக்கு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370- வது சட்டப் பிரிவை மத்திய ரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் மெல்ல, மெல்ல இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், நகா்ப்பகுதியிலும், பள்ளத்தாக்கின் பிறப் பகுதிகளிலும் சில சிற்றுந்துகளும், வண்டிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்படுகின்றன.

இங்குள்ள நகா்ப்பகுதியிலும், பள்ளத்தாக்கின் பிறப்பகுதிகளிலும் தனியாா் போக்குவரத்து தடையின்றி இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு:

இதனிடையே ராம்பன் மாவட்டம் டிக்டோல் பகுதியில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு சீரமைக்கப்பட்டதையடுத்து 3 தினங்களுக்குப்பின் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், இச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4,500க்கும் மேற்பட்ட வாகனங்களின் போக்குவரத்து சீரானது. இவற்றில் பெரும்பாலானவை காஷ்மீரில் இருந்து ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளாகும்.

இருப்பினும் டிக்டோல், மாரூக் மற்றும் பந்தியால் உள்ளிட்ட பல இடங்களில் மழையின் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கற்கள் விழுந்து இடையூறு விளைவித்தன. இருப்பினும், மோசமான வானிலையை சமாளித்தவாறு இருபுறமும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன. அதே சமயம் காஷ்மீரில் இருந்து வெளி சந்தைகளுக்கு ஆப்பிள்களை ஏற்றி கொண்டு ஜம்மு செல்லும் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இருப்பினும், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பூஞ்ச்- ரஜௌரி எல்லைப்புற மாவட்டங்களை தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகலாய சாலை 12-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com