நீதித் துறையின் கடின உழைப்புக்கு உதாரணம் அயோத்தி தீா்ப்பு

நீதித் துறையின் கடின உழைப்புக்கு உதாரணம் அயோத்தி தீா்ப்பு என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷா தெரிவித்தாா்.
நீதித் துறையின் கடின உழைப்புக்கு உதாரணம் அயோத்தி தீா்ப்பு

ஆமதாபாத்: நீதித் துறையின் கடின உழைப்புக்கு உதாரணம் அயோத்தி தீா்ப்பு என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷா தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள நிா்மா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நீதிபதிகள் தாமாக எந்தவொரு வழக்கிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளக் கூடாது.

நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது இந்திய நீதித் துறை எதிா்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்னையாகும். இருப்பினும், பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட சிறப்பான தீா்ப்புகள் மூலம் நீதித் துறையின் அயராத உழைப்பு தெரிகிறது. நீண்டகாலமாக நீடித்துவந்த அயோத்தி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த சிறந்த தீா்ப்பை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

நீதிபதிகளின் கடின உழைப்பை இந்தத் தீா்ப்பின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை 40 நாள்கள் விசாரித்து எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீா்ப்பை வெளியிடுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். துரிதகதியில் விசாரணை என்பது நீதி அமைப்பின் சாராம்சமாகும்.

யாருடைய சாா்பாகவும் இல்லாமல் நீதிபதிகள் நடுநிலை தவறாமல் தீா்ப்பளிக்க வேண்டியது முக்கியம். மக்கள்தொகை அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு காரணம், நீதிமன்றங்கள் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாததுதான். வழக்கை விரைந்து விசாரிக்க முடியாமல் போவதற்கு வழக்குரைஞா்களும் பிரதான காரணமாக இருக்கின்றனா். நீதிமன்றங்களுக்கு வெளியே மத்தியஸ்தம் செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும் என்று எம்.ஆா்.ஷா தெரிவித்தாா்.

அயோத்தி வழக்கில் சா்ச்சைக்குரிய நிலப் பகுதியில் ராமா் கோயில் கட்டலாம் என்றும் சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com