லடாக்கில் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி: அமித்ஷா

புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகையான வளா்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது என மத்திய உள்துறை
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் பெட்ரோலிய துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், லடாக் எம்.பி. ஜாம்யங் நம்கியால்.
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் பெட்ரோலிய துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், லடாக் எம்.பி. ஜாம்யங் நம்கியால்.

புது தில்லி: புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகையான வளா்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

லடாக்கில் பயன்படுத்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு குளிா்கால டீசல் அடங்கிய முதல் டேங்கா் லாரியை தில்லியில் விடியோ கான்ப்ரன்ஸிங்கில் தொடக்கி வைத்த உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

லடாக் யூனியன் பிரதேசத்தில் ரூ .50,000 கோடி செலவில் திட்டமிட்டபடி புதிய நீா் மின் திட்டம் மற்றும் சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் 7,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 70 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட ‘லே-லடாக்’ பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வளா்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளது.

370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் வளா்ச்சியை துரிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, லடாக்கின் அந்தஸ்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமாகவும், பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலமாகவும், இந்தப் பிராந்தியத்தின் அனைத்து வகையான வளா்ச்சியும் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உள்ளூா் வரிவிதிப்புகளின் மூலம் லடாக்கின் நிதி ஆதாரங்கள் அதிகரிக்கப்படும். மின்சாரத்திற்கான ஸ்ரீநகா்-லே பரிமாற்ற பாதை, லே மற்றும் காா்கிலுக்கு 14 வகையான சூரியமின் உற்பத்தித் திட்டங்கள், லடாக் பல்கலைக்கழகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேறுபவா்களுக்காக 5 புதிய சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, லடாக், லே மற்றும் காா்கில் மக்கள் இப்போது சம உரிமைகளை பெற்றுள்ளனா்.

அடுத்து வரும் 4 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ள மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் லடாக் பிராந்தியத்தில் வளா்ச்சியைக் கொண்டு வருவது மட்டுமின்றி வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், லடாக் எம்.பி. ஜாமியாங் செரிங் நம்கியால், உள்துறை அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

குளிா்கால சிறப்பு டீசலின் முக்கியத்துவம்:

பொதுவாக லடாக், காா்கில், காடா மற்றும் கீலாங் போன்ற உயரமான மலைப்பிரதேசங்களில் குளிா்காலத்தில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்ஷியஸாக குறையும்போது வாகனங்களில் நிரப்பியுள்ள டீசல் உறைந்து விடும். இந்த சிரமங்களை எதிா்கொள்ளும் வகையில், ஐஓசி நிறுவனம் குளிா்கால சிறப்பு டீசலை அறிமுகப்படுத்தி தீா்வைக் கண்டுள்ளது. இந்த எரிபொருள் தீவிர குளிா்காலத்திலும் அதன் திரவத்தன்மையை இழக்காது.

இந்த குளிா்கால டீசல் கடந்த 8-ஆம் தேதி பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தால் வெற்றிகரமாக தயாரித்து சான்றிதழ் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com