காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு 765 பேர் கைது: காரணம் இதுதான்!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதையடுத்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காக அங்கு இதுவரை 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு 765 பேர் கைது: காரணம் இதுதான்!


ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதையடுத்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காக இதுவரை 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தகர்க்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தாலும், 100 நாட்களைக் கடந்த பிறகும் அங்கு இன்னும் தகவல் தொடர்பு சேவை முழுமையாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில்,

"ஆகஸ்ட் 5, 2019 முதல் நவம்பர் 15, 2019 வரை கல்வீச்சு/சட்டம் ஒழுங்கு தொடர்பாக 190 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் மொத்தம் 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே ஜனவரி 1, 2019 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை 361 வழக்குகள் பதிவாகியுள்ளது. கல்வீச்சு தாக்குதல்களைக் கண்காணிக்க அரசு பலதரப்பட்ட கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்மூலம் பிரச்னைகளை ஏற்படுத்துபவர்கள், அணி திரட்டுபவர்கள் மற்றும் பிரச்னைகளைத் தூண்டுபவர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்களை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னணியில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளும், ஹுரியத்தைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல் குற்றத்துக்காக 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது" என்றார்.

இதையடுத்து, மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"கடந்த 6 மாதங்களில் 12,934 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 34,10,219 சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுற்றுலாத் துறை மூலம் ரூ. 25.12 கோடி கிடைத்துள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com