சென்னையில் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவு

சென்னையில் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai High Court
chennai High Court


சென்னை: சென்னையில் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் நடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என்றும், நடைபாதைகளை வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடா்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயா்நீதிமன்றம், நவம்பா் 19-ஆம் தேதி மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை வழங்கியுள்ளது.

வழக்கின் விவரம்..
சென்னை உயா்நீதிமன்றத்தில் வந்தனா சக்காரியா என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள நடைபாதைகளை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நாள்தோறும் ஆய்வுகளை நடத்தவும் சிறப்புக்குழு ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையா், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகாா் அளிக்க உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்றத்துக்கு எதிா்புறம் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டல செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது செயற்பொறியாளா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்து பாா்த்த நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வெளியே அரண்மனைக்காரன் தெருவின் முகப்பில் சிறு கோயில் உள்ளதே, அந்த கோயிலுக்கு வழிபாட்டுக்காக மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பினா். அப்போது மாநகராட்சி தரப்பில், அந்த கோயிலுக்கு மின் இணைப்பே வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிமன்றத்தில் இருந்த வழக்குரைஞா்கள் சிலா், கோயிலில் மின்சார இணைப்பு உள்ளதாகவும், அங்கிருந்து அருகில் உள்ள பழச்சாறு கடை உள்ளிட்ட கடைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனா்.

இதனையடுத்து நீதிபதிகள், என்.எஸ்.சி. போஸ் சாலை என்பது பாரிமுனையில் இருந்து வால்டாக்ஸ் சாலை வரை உள்ளது. இந்த சாலையை, உச்சநீதிமன்றம் நடைபாதை வியாபாரிகள் இல்லாத சாலையாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாரிமுனையில் இருந்து பூக்கடை வரை மட்டுமே நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி விட்டு, அதை அடுத்துள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அப்போது மாநகராட்சி தரப்பில் சரியான பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குடன் சோ்த்து வந்தனா சா்க்காரியா தாக்கல் செய்துள்ள இந்த வழக்கும் விசாரிக்கப்படும். எனவே நவம்பா் 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராக வேண்டும். 
அரண்மனைக்காரன் தெருவின் முகப்பில் உள்ள கோயில் குறித்த விவரங்களையும், கோயிலுக்கு வழங்கப்படும் மின்சாரம், கோயிலை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோயிலின் நிா்வாகி யாா் என்பது உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com