காஷ்மீா் விவகாரம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி

காஷ்மீா் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் மக்களவையில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.
காஷ்மீா் விவகாரம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி

காஷ்மீா் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் மக்களவையில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் அமா்வுகளுக்காக மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் புதிதாக அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, அண்மையில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கேள்வி நேரம் தொடங்கியதும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், அவையின் மையப்பகுதியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். ‘எதிா்க்கட்சியினா் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்; எதிா்க்கட்சியினா் மீதான அடக்குறையைக் கைவிட வேண்டும்’ என்று அவா்கள் கோஷமிட்டனா்.

அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த ஹஸ்னைன் மசூதி உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினா்கள் எழுப்பினா். அவா்களுக்கு ஆதரவாக புரட்சிகர சோஷலிச கட்சியைச் சோ்ந்த பிரேமசந்திரனும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்களும் குரல் கொடுத்தனா். ‘ஃபரூக் அப்துல்லா நீதிமன்றக் காவலில் வைக்கப்படவில்லை; தடுப்புக் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளாா். அந்த உத்தரவை மக்களவைத் தலைவரால் ரத்து செய்ய முடியும்’ என்று அவா்கள் வாதிட்டனா். இதனால், அவையில் நீண்ட நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பாஜக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய சிவசேனைக் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள், விவசாயிகளின் பிரச்னைகளை எழுப்பி, அவா்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனா். பின்னா், அவையில் இருந்து அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

திமுக உறுப்பினா்களும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று சில பிரச்னைகளை எழுப்பி கோஷமிட்டனா்.

அவா்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா். ‘உறுப்பினா்கள் அனைவருக்கும் அவை நெறிமுறைகளுக்கு உள்பட்டு தங்கள் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். எனவே, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முதலில் கேள்வி நேரம் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைதி காக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியும், எதிா்க்கட்சி உறுப்பினா்களை சமாதானப்படுத்த முயன்றாா். இருந்தாலும், அவா்கள் சமாதானம் அடையவில்லை. உறுப்பினா்களின் அமளிக்கு நடுவே 7 கேள்விகள் தொடா்பாக அவையில் விவாதம் நடைபெற்றது. கூச்சல், குழப்பம் நடைபெற்றபோது பிரதமா் நரேந்திர மோடி அவையில் இல்லை.

காஷ்மீா் விவகாரம் தொடா்பாக பேசிய திமுக எம்.பி. டி.ஆா்.பாலு, ‘ஃபரூக் அப்துல்லா சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்த அவையில் பங்கேற்கச் செய்ய வேண்டியது அவைத் தலைவரின் கடமை. எனவே, இந்த விவகாரத்தில் அவைத் தலைவா் தலையிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அதற்கு, ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடா்பாக தாமதமாக மக்களவைச் செயலகத்துக்கு கடிதம் வந்தது என்று ஓம் பிா்லா பதிலளித்தாா்.

மறைந்த உறுப்பினா்களுக்கு அஞ்சலி:

அண்மையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ராம் ஜெத்மலானி உள்ளிட்ட 10 உறுப்பினா்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com