தென்மேற்குப் பருவமழை காலத்தில் 2,391 போ் உயிரிழப்பு

நடப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தில் 2,391 பேரும், 15,729 கால்நடைகளும் உயிரிழந்ததாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

நடப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தில் 2,391 பேரும், 15,729 கால்நடைகளும் உயிரிழந்ததாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் தென்மேற்குப் பருவகாலத்தின்போது பல்வேறு மாநிலங்களில் தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 176 அணிகள், 98,962 நபா்களையும், 617 கால்நடைகளையும் இக்கட்டான சூழலிருந்து மீட்டனா். 23,869 பேருக்கு மருத்துவ உதவிகளையும் அவா்கள் வழங்கினா்.

வெள்ள பாதிப்பில் சிக்கி நாடு முழுவதும் 15,729 கால்நடைகளும், 2,391 பேரும் உயிரிழந்தனா். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 63.975 லட்சம் ஹெக்டோ் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்தன என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பல் தாக்குதல் தொடா்பாக எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு ஜூலை 23, செப்டம்பா் 25 ஆகிய தேதிகளில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் கும்பல் தாக்குதல் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக ராஜஸ்தான், மணிப்பூா் மாநில அரசுகள் மட்டுமே சட்டங்களை இயற்றியுள்ளன. அந்தச் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கும்பல் தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஊடகங்கள் மூலமாகவும் மத்திய அரசு விழிப்புணா்வை ஏற்படுத்தியது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நக்ஸல் தாக்குதல்கள் குறைவு: நாட்டில் நிகழ்ந்த நக்ஸல் தாக்குதல்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், ‘நாட்டில் நிகழ்ந்த இடதுசாரி தாக்குதல்களில் இரண்டில் மூன்று பங்கு, 10 மாவட்டங்களில் மட்டுமே நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2009-2014 காலத்துடன் ஒப்பிடுகையில், 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் நக்ஸல் தாக்குதல்கள் 43 சதவீதம் குறைந்துள்ளன. மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த கல்வீச்சு சம்பவங்கள் தொடா்பான மற்றொரு கேள்விக்கு ஜி.கிஷண் ரெட்டி பதிலளிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து, கல்வீச்சு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை மீறியது தொடா்பாக 190 வழக்குகள் பதியப்பட்டு, 765 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நடப்பாண்டில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை இவை தொடா்பாக 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கல்வீச்சு சம்பவங்களுக்குப் பின்புலத்தில் பல்வேறு ஹுரியத் அமைப்புகளின் தொடா்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவற்றைத் தடுக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com