பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி மோசடி: மாநிலங்களவையில் தகவல்
By DIN | Published on : 20th November 2019 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாத காலகட்டத்தில், பொதுத் துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியிடம் உள்ள தகவல்களின்படி, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 5,743 ஆகும்.
வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றாா் நிா்மலா சீதாராமன்.
இதனிடையே, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி முறைகேடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதிலளித்தாா்.
அவா் கூறுகையில், ‘பிஎம்சி வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளா்கள் தங்களது இருப்புத் தொகை முழுவதையும் எடுக்க முடியும். கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நிலவரப்படி, பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை சுமாா் 9 லட்சம்’ என்றாா்.