ஜம்மு-காஷ்மீர், என்ஆர்சி விவகாரம்: மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் என்ஆர்சி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை உரையாற்றினார்.
ஜம்மு-காஷ்மீர், என்ஆர்சி விவகாரம்: மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் என்ஆர்சி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அங்கு இணைய சேவை வழங்குவது தொடர்பாக அம்மாநில அதிகாரிகளால் முடிவெடுக்க முடியும். எனவே பாதுகாப்பு நலன் அடிப்படையில், அங்குள்ள அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் போதுமான அளவு மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. குறிப்பாக தேவைக்கு ஏற்ப ஒவ்வொருவருடைய சொந்த இடங்களுக்கே வாகனத்தில் சென்று மருத்துவ சேவை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சேவைகளை அப்பகுதி நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வருகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் அரிசி கிடைப்பது போதுமான அளவில் உள்ளது. அனைத்து லேண்ட்லைன் வகை தொலைத்தொடர்புகளும் பயன்பாட்டில் உள்ளன. இம்முறை 22 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து உருது மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வங்கி சேவைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களும் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பாட்டில் உள்ளது. தொகுதி மேம்பாட்டு கூட்டமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, 98.3 சதவீத வாக்குப்பதிவு பதிவு நடைபெற்றுள்ளது.

370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு அங்கு மிகப்பெரிய அளவில் கலவரங்கள் ஏற்பட்டதாக இங்கு அவையில் உள்ளவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்லாமல் கல்வீச்சு சம்பவங்கள் பெருமளவில் குறைந்துவிட்டன.

நான் முன்வைத்த இந்த உண்மைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுகிறேன். இந்த புள்ளிவிவரங்களை அவர் ஏன் பதிவு செய்யவில்லை? இந்த பிரச்னையை ஒரு மணி நேரம் கூட விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

என்ஆர்சி விவகாரம்

ஹிந்து, பௌத்தம், சீக்கியர், சமணர், கிறிஸ்தவர், பார்சி அகதிகள் குடியுரிமைப் பெற வேண்டும் என்பதால்தான் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தேவைப்படுகிறது. இதன்மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உள்ளாகி தஞ்சமடையும் அகதிகளால் இந்திய குடியுரிமை பெற முடியும்.

என்ஆர்சி-யால் ஹிந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் பாதிப்புக்குள்ளாகும் விதிமுறைகள் எதுவும் கிடையாது. மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். இதில் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து குடிமக்களும் இடம் பெறுவார்கள். 

என்ஆர்சி பதிவு என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நடைபெறும். எனவே மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தப்படும் என்பது போன்ற பொய் பரப்புரைகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். 

வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிட உரிமை உண்டு. அசாம் முழுவதும் இந்த தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். தீர்ப்பாயத்தை அணுக எந்தவொரு நபரும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வழக்கு மற்றும் வழக்குரைஞருக்கான முழுச்செலவையும் அசாம் அரசு ஏற்கும்.

இவ்வாறு மாநிலங்களவைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com