சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை சந்திப்பாரா? - சஞ்சய் ராவத் பதில்!

விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 
SANJAY RAUT SHIV SENA
SANJAY RAUT SHIV SENA

மகாராஷ்டிர விவசாயிகளின் நலனுக்காக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று  சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக - சிவசேனை கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததாலும், அதன்பின்னர் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததாலும், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள்  இதில் கலந்துகொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை உள்ளிட்ட மூன்று கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என இன்று தெரியவர வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனை தலைமையில் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 'தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனவே, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். சிவசேனை ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் எங்களது எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள்' என்று கூறினார். 

தொடர்ந்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத்,  மக்களின் நலன் கருதி, முக்கியமாக விவசாயிகளின் நலனுக்காக உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடி அல்ல, யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com