கட்செவி அஞ்சல் வேவு விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க மறுப்பு

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்களின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) தகவல்களை வேவு பார்க்க, இஸ்ரேலின் "பெகாசஸ்' உளவு
கட்செவி அஞ்சல் வேவு விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க மறுப்பு

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்களின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) தகவல்களை வேவு பார்க்க, இஸ்ரேலின் "பெகாசஸ்' உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா? என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு நேரடியாக பதிலளிக்கவில்லை.

இதுதொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2000-ஆம் ஆண்டைய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-ஆவது பிரிவின்படி, தேசத்தின் இறையாண்மை, ஒருமைபாடு தொடர்புடைய காரணங்களுக்காக, எந்தவொரு கணினியில் உள்ள தகவல்களை கண்காணிக்கவும், இடைமறித்து பதிவு செய்யவும் மத்திய-மாநில அரசுகளுக்கு அதிகாரமுள்ளது.

அதேசமயம், சட்ட நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு உள்பட்டு இந்த அதிகாரம் செயல்படுத்தப்பட வேண்டும். மத்திய விசாரணை அமைப்புகள், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். மாநிலங்களைப் பொருத்தவரை, மாநில உள்துறைச் செயலரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்வதற்கு, புலனாய்வுத் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை, போதைபொருள் தடுப்பு பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு அமைப்பு, "ரா' உளவு அமைப்பு, சமிக்ஞை புலனாய்வு இயக்குநரகம், தில்லி காவல் துறை ஆணையரகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், "பெகாசஸ்' உளவு மென்பொருளை மத்திய அரசு வாங்கியுள்ளதா? என்பது தொடர்பாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு நிறுவனம் உருவாக்கிய "பெகாசஸ்' உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, உலக அளவில் சுமார் 1,400 முக்கியப் பிரமுகர்களின் கட்செவி அஞ்சல் தகவல்களை அடையாளம் தெரியாத நிறுவனங்கள் வேவு பார்த்த விவகாரம் அம்பலமானது.
இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என 121 பேரின் கட்செவி அஞ்சல் தகவல்களும் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல்: பயங்கரவாதிகள், சமூகவிரோத சக்திகளால் இயக்கப்படும் ஆளில்லா விமானங்களை கையாள்வதற்கு, பாதுகாப்புப் படையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மக்களவையில் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

பஞ்சாபில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டதை, அந்த மாநில காவல்துறையினர் அண்மையில் கண்டறிந்தனர். இதேபோல், சத்தீஸ்கரில் சிஆர்பிஎஃப் முகாமை ஆளில்லா விமானம் மூலம் நக்ஸல்கள் நோட்டமிட்டதும் தெரியவந்தது.
புதிதாக 1,000 மக்கள் மருந்தகங்கள்: நிகழ் நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் புதிதாக 1,000 மக்கள் மருந்தகங்கள் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கௌடா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "நாடு முழுவதும் இதுவரை 5,754 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டுக்குள் புதிதாக 1,000 மருந்தகங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் அமைவது உறுதி செய்யப்படும்' என்றார்.

பாக். ராணுவம் 950 முறை அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 950 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "கடந்த ஆகஸ்ட் - அக்டோபர் காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 950 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களுக்கு இந்திய தரப்பிலிருந்து திறனுடன் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com