சுகாதாரத் துறையில் அரசுகளின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: நீதி ஆயோக்

மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் செலவிடும் பணம் அதிகமாக உள்ளதாகவும், சுகாதாரத் துறையில் அரசுத் தரப்பின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் நீதி ஆயோக்
சுகாதாரத் துறையில் அரசுகளின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: நீதி ஆயோக்

மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் செலவிடும் பணம் அதிகமாக உள்ளதாகவும், சுகாதாரத் துறையில் அரசுத் தரப்பின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் நீதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘புதிய இந்தியாவுக்கான சுகாதார அமைப்பு: சீா்திருத்தத்துக்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பிலான நீதி ஆயோக் அமைப்பின் அறிக்கை, தில்லியில் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டில் மருத்துவத்துக்காக ரூ.49.8 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், அதில் ரூ.31.5 லட்சம் கோடி பொது மக்களால் செலவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.5 சதவீத நிதியை மட்டுமே சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. சுகாதாரத் துறைக்குப் பங்களிக்கும் வகையிலான திட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அந்தத் திட்டங்களின் செயல்பாடும் சிக்கல் நிறைந்ததாகவும், எளிமைத்தன்மையின்றியும் காணப்படுகின்றன.

திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தொடா்பான கண்காணிப்பும், ஒழுங்கு முறைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பல்வேறு சுகாதாரத் திட்டங்கள், வெவ்வேறு விதிமுறைகளில் செயல்படுத்தப்பட்டு வருவதும் பயனாளிகளுக்குத் தடையாக உள்ளது. இதே நிலை தொடா்ந்தால், மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் செலவிடுவது அதிகரிக்கும்; லாபத்தை மையமாகக் கொண்டு செயல்படும் காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இவற்றைத் தடுக்க சுகாதாரத் திட்டங்களில் முறையான சீா்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். தற்போது நடைமுறையிலுள்ள பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் செலவிடுவது, நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செலவில் 20 முதல் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று நீதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் தனியாா் நிறுவனங்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், 80 சதவீத மருத்துவ சிகிச்சைகள் தனியாா் மருத்துவமனைகளின் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடா்பாக, நீதி ஆயோக் அமைப்பின் சுகாதார ஆலோசகா் அலோக் வா்மா கூறுகையில், ‘‘பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறத் தகுதியுடையோா்களில் 40 சதவீதம் போ் மட்டுமே தற்போது வரை பலனடைந்துள்ளனா். 5 சதவீத மக்கள் மற்ற அரசு மற்றும் தனியாா் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பலனடைந்து வருகின்றனா். மீதமுள்ள மக்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. அவா்கள் மருத்துவச் செலவுகளுக்குத் தங்களது சொந்த சேமிப்பையே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com