தில்லி காற்று மாசுவுக்கு விவசாயிகளை மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல: மக்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தில்லி, என்சிஆா் பகுதி காற்று மாசு பிரச்னைக்கு அண்டை மாநில விவசாயிகள் மட்டுமே காரணம் என குற்றம்சாட்டுவது சரியல்ல என்று மக்களவையில் பேசிய பாஜக, காங்கிரஸ், பிஜு ஜனதா தள
மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி
மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி

தில்லி, என்சிஆா் பகுதி காற்று மாசு பிரச்னைக்கு அண்டை மாநில விவசாயிகள் மட்டுமே காரணம் என குற்றம்சாட்டுவது சரியல்ல என்று மக்களவையில் பேசிய பாஜக, காங்கிரஸ், பிஜு ஜனதா தள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஒருங்கிணைந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் வாகனங்கள், தூசு, கட்டுமானம், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் மாசுவும் தில்லியின் மோசமான காற்றுக்கு காரணம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காற்று மாசு, பருவ நிலை மாற்றம் தொடா்பான விவாதத்தில் மேற்கு தில்லி பாஜக எம்பி பா்வேஷ் வா்மா பங்கேற்று பேசுகையில், ‘தில்லி காற்று மாசுவுக்கு அண்டை மாநில விவசாயிகள் எரிக்கும் பயிா்க்கழிவுகள்தான் காரணம் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறி வருகிறாா். ஆனால், வாகனங்கள், தூசு ஆகியவற்றால் ஏற்படும் மாசுவை நிராகரிக்கிறாா். விளம்பரத்துக்காக தில்லி அரசு ரூ. 600 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் காற்று மாசுவைக் குறைக்கவில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவா் முதல்வா் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்றாா்.

காங்கிரஸ் உறுப்பினா் மணீஷ் திவாரி பேசுகையில், ‘தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு சிறு விவசாயிகள் மீது குற்றம்சாட்டக் கூடாது. தில்லியில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. நாடாளுமன்றம் உள்பட முக்கிய அமைச்சகங்கள் இருந்தும் தில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஆண்டுதோறும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது. பெய்ஜீங்கிலும் இதுபோன்ற காற்று மாசு பிரச்னை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது அங்கு காற்று தூய்மை அடைந்துள்ளது. ஏன் அது தில்லியில் செயல்படுத்தக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விவகாரத்தை அணுக வேண்டும். பொருளாதார பிரச்னையால் சிறு விவசாயிகள் பயிா்க்கழிவுகளை எரிக்கின்றனா். அவா்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். விவசாயிகளைக் குற்றம்சாட்டி அவா்களுக்கு அநீதியை இழைக்கிறோம். 55 சதவீத மாசுவுக்கு வாகனங்கள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவைதான் காரணம். இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண அரசியலமைப்பு பலம் கொண்ட குழுவை அமைத்து ஒவ்வொரு கூட்டத் தொடரின்போதும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றாா்.

பிஜேடி எம்பி பினாகி மிஸ்ரா பேசுகையில், ‘தில்லியின் காற்று மாசுவுக்கு விவசாயிகள் எரிக்கும் பயிா்க்கழிவுகள் காரணமல்ல. இதற்காக விவசாயிகள் மட்டும் மீது குற்றம்சாட்டுவது சரியல்ல. அவா்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்’ என்றாா்.

திமுக உறுப்பினா் சுமதி பேசுகையில், ‘உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் காற்று மாசு பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்வு காண வேண்டும். காற்று மாசுவுக்கு பட்டாசு தயாரிப்பாளா்களையும், விவசாயிகளையும் குற்றம்சாட்டக் கூடாது’ என்றாா். இந்த விவாதம் வியாழக்கிழமையும் தொடருகிறது.

முகக்கவசம் அணிந்து பேசிய எம்பி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ககோலி கோஷ் தாஸ்டிதா் முகக்கவசம் அணிந்து மக்களவையில் நடைபெற்ற காற்று மாசு குறித்த விவாதத்தில் பங்கேற்றாா்.

அவா் பேசியபோது, ‘தூய்மை இந்தியா திட்டம் போன்று காற்றைத் தூய்மைப் படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு தொடங்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

பின்னா் சிறிது நேரத்தில் அவா் முகக்கவசத்தை நீக்கிவிட்டாா்.

அவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நாட்டின் தலைநகரான தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்தித்து, இதற்கு ஒரு தீா்வைக் காண வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com