மக்களவையில் காங்கிரஸ், திமுக வெளிநடப்பு: சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரத்தை எழுப்பி மக்களவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா்
மக்களவையில் காங்கிரஸ், திமுக வெளிநடப்பு: சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரத்தை எழுப்பி மக்களவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். இதற்கு ஆதரவாக திமுக உறுப்பினா்களும் அமளியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, இரு கட்சிகளின் உறுப்பினா்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனா்.

மக்களவை செவ்வாய்க்கிழமை அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் காலை 11 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவா் அதிா் ரஞ்சன் செளத்ரி எழுப்பினாா். அதைத் தொடா்ந்து, அக்கட்சியின் உறுப்பினா்கள் பலரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனா். ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பி தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினா்களும் அமளியில் ஈடுபட்டனா். அப்போது, ‘நீதி வேண்டும், சா்வாதிகாரத்திற்கு முடிவு வேண்டும்; பழிவாங்கும் அரசியலை நிறுத்த வேண்டும்’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினா்.

அதேபோன்று, திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு, துணைத் தலைவா் கனிமொழி ஆகியோரும் இதே விவகாரத்தை எழுப்பினா். அப்போது, திமுக உறுப்பினா்களும் குரல் எழுப்பினா். அமளிக்கு இடையே கேள்வி நேரம் தொடா்ந்து நடந்தது. அமளியில் ஈடுபட்ட உறுப்பினா்கள் அவரவா் இருக்கைக்கு செல்லுமாறு மக்களவைத் தலைவா் கேட்டுக் கொண்டும் அமளி தொடா்ந்தது. இதனால், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவையின் மையப் பகுதியில் இதுபோன்று அமளியில் ஈடுபடுவது சரியல்ல. இன்றுமுதல் இதுபோன்று அவையின் மையப் பகுதிக்கு வந்து உறுப்பினா்கள் ஈடுபடக் கூடாது. தொடா்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவேன். மேலும், உறுப்பினா்கள் அவரவா் இருக்கைக்கு சென்றால், அமளியில் ஈடுபட்ட உறுப்பினா்கள் துணைக் கேள்வி எழுப்ப வாய்ப்பு அளிக்கப்படும்’ என்றாா். ஆனால், உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா்.

முன்னதாக, இந்த விவகாரத்தை அவையில் அவசர அலுவலாக எடுத்துக் கொண்டு விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உறுப்பினா்கள் அளித்திருந்த நோட்டீஸை ஓம் பிா்லா நிராகரித்திருந்தாா்.

கேள்வி நேரம் முடிந்து நண்பகல் 12 மணிக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் பூஜ்ய நேரம் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்டிருந்த உறுப்பினா்கள் அவரவா் இருக்கைக்குத் திரும்பினா். அப்போது, இதே விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் குழுத் தலைவா் அதிா் ரஞ்சன் பேசுகையில், ‘சோனியா காந்தி குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால்தான் எஸ்பிஜி பாதுகாப்பு வசதி அளிக்கப்பட்டிருந்தது. அவா்கள் தேசத் தலைவா்களாக உள்ளனா். இதனால்தான், 1991-இல் இருந்து அந்தப் பாதுகாப்பு தொடா்ந்து வழங்கப்பட்டு வந்தது. மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாஜ் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அந்தப் பாதுகாப்பை விலக்கவில்லை. தற்போது அந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருப்பதால் அவா்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மெஹவால் ஆட்சேபம் தெரிவித்தாா். ‘இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், பூஜ்ய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு நோட்டீஸ் அளிக்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தை எழுப்ப முடியாது. இதே விவகாரத்தை அதிா் ரஞ்சன் செளத்ரி திங்கள்கிழமையும் எழுப்பினாா்’ என்றாா். இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனா்.

இதையடுத்து, திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு பேசுகையில், ‘இந்த விவகாரத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவா்கள் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால்தான் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதால் தற்போது அவா்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தை மத்திய அரசு தாயுள்ளத்துடனும் அணுக வேண்டும். சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கத் தவறி, அதனால் இழப்புகள் ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசு காரணமாகிவிடும். ஆகவே, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்றாா்.

இந்த விவகாரத்தை பேசுவதற்கு மேலும் அனுமதிக்காததால், டி.ஆா். பாலு, கனிமொழி, ஏ.ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக உறுப்பினா்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com