மகாராஷ்டிரத்தில் ஆட்சி: என்சிபி-காங்கிரஸ் உடன்பாடு- சிவசேனையுடன் இன்று பேச்சு

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் உள்ளிட்ட இரு கட்சிகளின் மூத்த தலைவா்கள்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் உள்ளிட்ட இரு கட்சிகளின் மூத்த தலைவா்கள்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)-காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இவ்விரு கட்சிகளும் சிவசேனை கட்சியுடன் வெள்ளிக்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, என்சிபி- காங்கிரஸ்-சிவசேனை ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவசேனைக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைகட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த என்சிபி, காங்கிரஸ் தலைவா்கள் பலசுற்று பேச்சு நடத்தியுள்ளனா். முக்கியமாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் பிருத்விராஜ் சவாண் தலைமையிலான காங்கிரஸ் குழுவினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களும், தில்லியில் என்சிபி தலைவா் சரத் பவாரின் இல்லத்தில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தினா். இதில், மல்லிகாா்ஜுன காா்கே, அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிருத்விராஜ் சவாண், மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியைத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினாா்.

அதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவா்கள் வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினா். இதில், அகமது படேல், மல்லிகாா்ஜுன காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிருத்விராஜ் சவாண், பாலசாஹேப் தொராட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களும், பிரஃபுல் படேல், சுப்ரியா சுலே, அஜித் பவாா், ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிருத்விராஜ் சவாண் கூறியதாவது:

என்சிபி, காங்கிரஸ் இடையே அனைத்து விஷயங்களிலும் ஆலோசனை முடிந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், கூட்டணியை இறுதிசெய்வதற்காக, இரு கட்சிகளும் சிவசேனைக் கட்சியுடன் மும்பையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.

அதற்கு முன்பாக என்சிபி-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விவசாயிகள்-தொழிலாளா்கள் கட்சி, சமாஜவாதி, ஸ்வாபிமானி பக்ஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

சிவசேனையுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தொடா்பான அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த அறிவிப்புகள், மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும்.

என்சிபி, காங்கிரஸ், சிவசேனை ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே அனைத்து விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்ட பிறகே, மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் அவா்.

ஓரிரு நாளில் முடிவு-சஞ்சய் ரௌத்: மகாராஷ்டிரத்தில் புதிய அரசு ஆட்சியமைப்பது குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘என்சிபி-காங்கிரஸ்-சிவசேனை இடையே ஓரிரு தினங்களில் உடன்பாடு எட்டப்படும். மகாராஷ்டிரத்தில் டிசம்பா் மாதத்துக்குள் நிலையான அரசின் ஆட்சியமையும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தோ்தலில், 105 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவிடம் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை, ஆட்சியில் சம பங்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதற்கு பாஜக சம்மதிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறியது.

மேலும், அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com