தேசியவாத காங்கிரஸ் கட்சி புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நியமனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நியமனம்

மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டு பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

மகாராஷ்டிரத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும், எந்த அரசாங்கமும் உருவாக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் பிரச்னை உள்பட பல பிரச்னைகள் மகாராஷ்டிரம் எதிர்கொண்டுள்ளது. எனவே நிலையான அரசை அமைக்க முடிவு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகள் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று துணை முதல்வராகப் பதவியேற்ற பின்னர் அஜித் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தின் போது வருகைப் பதிவுக்காக பெறப்பட்ட கையெழுத்துகளை தவறாகப் பயன்படுத்தி அஜித் பவார் துணை முதல்வராகியுள்ளார் என்ற குற்றம்சாட்டுகள் எதிர்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே, பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அல்ல. அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அஜித் பவாரின் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சரத் பவார் தலைமையில் சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 50 பேர் வரை பங்கேற்றதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவார் உட்பட 4 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இதில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜெயந்த் பாடீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com