சரத் பவாருடன் பாஜக எம்.பி., மற்றும் ஜெயந்த் பாடீல் திடீர் சந்திப்பு

சனிக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காத பாபன் ஷிண்டேவும் சரத் பவாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சரத் பவாருடன் பாஜக எம்.பி., மற்றும் ஜெயந்த் பாடீல் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். 

சிவசேனைக்கு ஆதரவு தெரிவித்து வரும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜக-வுக்கு ஆதரவளித்தள்ளது அம்மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக அமைந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அல்ல. அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அஜித் பவாரின் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. 

எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜெயந்த் பாடீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மும்பையில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பாஜக எம்.பி. சஞ்சய் காகடே ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜெயந்த் பாடீலும் சந்தித்துப் பேசினார்.

அதுமட்டுமல்லாமல், சனிக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காத பாபன் ஷிண்டேவும் சரத் பவாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com