சிவசேனை, காங்கிரஸ், என்.சி.பி தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைப்பு

சிவசேனை, காங்கிரஸ், என்.சி.பி தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைப்பு

மகாராஷ்டிரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகாராஷ்டிரா ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதில், 24 மணிநேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என 3 கட்சிகளும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

அப்போது சிவசேனை தரப்பில் கபில் சிபல் முன்வைத்த வாதத்தில்,

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்து விட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் அவர்கள் நிரூபிக்கட்டும், இல்லையெனில், நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றிருந்தது.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதத்தில்,

சட்டப்பேரவை குழு தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநர் மாளிகையில் தேசியவாத காங்கிரஸ் சமர்ப்பித்தது. ஒரு நாள் கூடுதல் கால அவகாசம் அளித்தாலும், அது குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிடும். அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் நீக்கியுள்ளது, பிறகு கட்சியின் பலம் என்பதே இல்லாமல் எப்படி துணை முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்? ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உடனே உத்தரவிட வேண்டும் என்றிருந்தது.

பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி முன்வைத்த வாதத்தில்,

ஏற்கனவே ஆட்சி அமைத்தாகிவிட்டது, எனவே இந்த மனுவை விசாரிக்க கூடாது. 3 கட்சிகள் தொடர்ந்த இந்த மனு முதலில் உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பெரும்பான்மையை அவையில்தான் நீருபிக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் முடிவு சட்ட ஆய்வுக்கு உட்பட்டதல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்கூட்டியே நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் ஆளுநரிடம் கேட்கலாம். ஞாயிறன்று நீதிமன்றத்தை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை என்றிருந்தது.

நேற்று நள்ளிரவுதான் எனக்கு இந்த மனு வழங்கப்பட்டது என்று மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டார். மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கியதில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஃபட்னாவீஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை திங்கள்கிழமை காலை 10.30 மணிக்குள் மத்திய அரசு சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மகாராஷ்டிரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கில் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com