அஜித் பவார் பின்னணியில் நானா? சரத் பவார் விளக்கம்

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து, துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாரின் பின்னணியில் தான் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சரத் பவார்
செய்தியாளர்கள் சந்திப்பில் சரத் பவார்


மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து, துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாரின் பின்னணியில் தான் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தின் முதல் முதல்வர் யஷ்வந்த்ராவ் சவானின் நினைவு தினத்தை முன்னிட்டு, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் சதாரா மாவட்டம் காரத் நகரில் உள்ள யஷ்வந்த்ராவ் நினைவிடத்தில் இன்று (திங்கள்கிழமை) மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு என்றும், அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) முடிவல்ல என்றும் விளக்கமளித்தார். மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவல்ல. அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். அஜித் பவாரின் இந்த கலகத்துக்குப் பின்னணியில் நான் இருப்பதாக கூறுவது தவறு. மகாராஷ்டிரத்தில் சிவசேனை - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்பதில் சிறிதளவுகூட சந்தேகம் இல்லை. சிவசேனை, காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அஜித் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் மூன்று கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. 

ஆனால், அஜித் பவார் எடுத்த முடிவு என்பது அவரது தனிப்பட்ட முடிவாகும். இதில் எனது தலையீடு இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் நான் கூறியிருப்பேன்" என்றார்.

சிவசேனை - காங்கிரஸ் - என்சிபி கூட்டணியில் அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்ததால் அஜித் பவார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கருத்துக்கு பதிலளித்த அவர், 

"தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

வங்கி முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கின் அழுத்தம் காரணமாக அஜித் பவார் இந்த முடிவை எடுத்தாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், "எனக்கு எதுவும் தெரியாது. மற்ற கட்சிகளைவிட தங்கள் கட்சி எப்போதுமே வேறுபட்டு இருக்கும் என பாஜக கூறுவது வழக்கம். தற்போது அந்த வேறுபாடு (இலக்கை அடைய அதிகாரங்களைப் பயன்படுத்துவது) என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவாரா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "இந்த முடிவை கட்சிதான் எடுக்கும்" என்றார்.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் மூன்று கட்சிகள் இணைந்து அரசு அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 

"வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் 5 ஆண்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்த விரிவான ஆலோனைகள் அவசியமாகும். குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் சிவசேனையின் நிலைப்பாடு இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். அதுபோன்ற சூழலில் மாற்றுக் கருத்துகளை புறம்தள்ளிவிட்டு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதை அறிவிப்பது சரி. ஆனால், அரசை நடத்த வேண்டும் என்றால் பிரச்னையின் நடைமுறை சாத்தியம் குறித்து அறிய வேண்டும். 5 ஆண்டுகள் அரசை நன்றாக நடத்த வேண்டும் என்றால், ஆலோசனைகளுக்கு நேரம் எடுக்கத்தான் செய்யும்" என்றார். 

மகாராஷ்டிரத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து பேசிய அவர், 

"எனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுபோன்ற பல சூழல்களைப் பார்த்திருக்கிறேன். கஷ்டங்கள் வரும், ஆனால் அவை தற்காலிகமானதுதான். எனது அனுபவத்தில் மக்கள் எப்போதுமே வலிமையாக இருப்பார்கள். இதுவரை எனக்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது. அதனால், வருத்தம் கொள்வதற்கு எதுவும் இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com