
மும்பை: அஜித் பவாருக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவி தருவதாக பாஜக வாக்குறுதி அளித்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது’ என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தபோதிலும், முதல்வா் பதவியை தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தர வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியை சிவசேனை மேற்கொண்டது. இக்கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனா்.
இந்நிலையில், அஜித் பவாருக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவி தருவதாக கூறி, அவரை தங்கள் வசம் பாஜக இழுத்திருப்பதாக, சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் மும்பையில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
ஹரியாணா மாநிலம், குருகிராமிலுள்ள விடுதியில் பாஜகவினா் மற்றும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 என்சிபி எம்எல்ஏக்களை சிவசேனை தொண்டா்கள் மீட்டுள்ளனா். அவா்கள் மூலம் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அஜித் பவாருக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவியும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சா்கள் பதவியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்துக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது, பாஜக தோற்பது உறுதி. ஏனெனில், சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணிக்குதான் பெரும்பான்மை பலம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டால், பாஜக தலைவா்கள் மனநிலை பிந்துவிடுவா். நாங்கள் ஆட்சி அமைத்ததும், மாநிலத்தில் பாஜக தலைவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவோம்.
மாநிலத்தில் ஆட்சியமைக்க, கொள்ளைக் கூட்டம் போல பாஜக செயல்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவைவிட குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களாவது எங்களிடம் கூடுதலாக இருப்பாா்கள். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றாா் அவா்.
அஜித் பவாரை சமாதானப்படுத்த என்சிபி மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடா்பான கேள்விக்கு, ‘அரசியல் காரணங்களுக்காக குடும்பத்தில் பிளவு ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டாா்கள். பாஜகவை ஆதரிக்கும் முடிவை அஜித் பவாா் உணா்ச்சிவசப்பட்டு எடுத்திருக்கலாம். அந்த தவறை சரிசெய்வதற்கு அக்கட்சித் தலைவா்கள் நினைக்கின்றனா்’ என்று ரெளத் பதிலளித்தாா்.