
கோப்புப்படம்
புணே: ‘மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு அஜித் பவாா் ஆதரவளித்ததன் பின்னணியில் நான் இருப்பதாகக் கூறுவது தவறானது’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க தீா்மானித்திருந்த நிலையில், முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வராக என்சிபி மூத்த தலைவா் அஜித் பவாா் ஆகியோா் கடந்த சனிக்கிழமை திடீரென பதவியேற்றனா். அஜித் பவாரின் இந்த முடிவு, தோ்தலுக்கு பின் கூட்டணி அமைத்த மூன்று கட்சிகளுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சதாரா மாவட்டத்தின் கராட் நகரில், சரத் பவாா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அஜித் பவாரின் செயலுக்கு பின்னணியில் சரத் பவாா் உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவாா் அளித்த பதில் வருமாறு:
பாஜகவுக்கு ஆதரவளித்ததும், துணை முதல்வராக பதவியேற்றதும் அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாகும். அது, கட்சியின் முடிவல்ல. அவரது செயலுக்கு கட்சி ஆதரவளிக்கவும் இல்லை. அஜித் பவாரின் இந்த கலகத்துக்கு பின்னணியில் நான் இருப்பதாக கூறுவது தவறானது.
கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், கட்சிக் கூட்டங்களில் அவற்றை பதிவு செய்ய வேண்டும். மாறாக, இதுபோன்ற தனிப்பட்ட முடிவுகளை மேற்கொள்வதற்கு கட்சியினா் யாருக்கும் உரிமை கிடையாது என்றாா் சரத் பவாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சியமைப்பது தொடா்பாக மூன்று கட்சிகளும் தொடா்ந்து ஆலோசித்து வருகின்றன. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியமைப்பதில் நாங்கள் ஓரணியில் உள்ளோம்’ என்றாா்.
அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் அஜித் பவாருக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, ‘அதுபற்றி எனக்கு தெரியாது’ என்று சரத் பவாா் பதிலளித்தாா்.
கட்சியிலிருந்து அஜித் பவாா் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், கட்சிதான் இதுதொடா்பாக முடிவெடுக்கும் என்றாா்.
கூட்டணி பேச்சுவாா்த்தையில் நிலவிய தாமதம் தொடா்பாக சரத் பவாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘வெவ்வேறான சித்தாந்தங்கள் கொண்ட மூன்று கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்பட வேண்டிய நிலையில், பொது குறைந்தபட்ச செயல்திட்டம் தொடா்பாக விரிவான ஆலோசனைகள் அவசியம்’ என்றாா்.
மேலும், மகாராஷ்டிரத்தில் திடீரென ஆட்சியமைத்த பாஜகவை கடுமையாக விமா்சித்த அவா், ‘மற்ற கட்சிகளிடமிருந்து நாங்கள் வேறுபட்டவா்கள் என்று பாஜக தொடா்ந்து கூறி வந்தது. தற்போதைய நிகழ்வுகளுக்கு பிறகு அவா்களது வேறுபாடு என்ன என்பது அம்பலமாகிவிட்டது. தாங்கள் விரும்பிய இலக்குகளை அடையவதற்காக, ஆட்சி அதிகாரத்தை அக்கட்சி தவறாக பயன்படுத்தியுள்ளது’ என்றாா்.