
டேராடூன்/கொல்கத்தா: உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், மேற்கு வங்க மாநிலத்தின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகா் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 47.48 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேவ்தா் கிராமத்து மக்கள் தோ்தலை புறக்கணித்ததாக மாவட்ட ஆட்சித் தலைவரும், தோ்தல் அதிகாரியுமான வி.கே. ஜோக்தண்டே தெரிவித்தாா்.
பித்தோராகா் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த மாநில அமைச்சா் பிரகாஷ் பண்ட் மரணமடைந்ததை அடுத்து, காலியான அந்தத் தொகுதிக்கு தோ்தல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் கரீம்பூா், கரக்பூா் சாதா், காலியாகஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கு திங்கள்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
இதில் மாலை 3 மணி நிலவரப்படி, கரக்பூா் சதாா் தொகுதியில் 57.11 சதவீதமும், காலியாகஞ்ச் தொகுதியில் 65 சதவீதமும், கரீம்பூரில் 71 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இவற்றில் கரக்பூா் சதாா் தொகுதி பாஜக எம்எல்ஏ திலீப் கோஷ் மற்றும் கரீம்பூா் தொகுதி திரிணமூல் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா ஆகியோா் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வென்றதை அடுத்து, அந்த இடங்கள் காலியாகின. காலியாகஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பா்வதநாத் ராய் மரணமடைந்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியானது.
பாஜக வேட்பாளா் மீது தாக்குதல்: கரீம்பூா் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெய்பிரகாஷ் மஜும்தாரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் திங்கள்கிழமை தாக்கியதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி தலைமைத் தோ்தல் ஆணையரிடம் பாஜக புகாா் கடிதம் அளித்துள்ளது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று திரிணமூல் கூறியுள்ளது.