
மும்பையில் ஆளுநா் மாளிகை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை கடிதம் அளித்த சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவா்கள்.
மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களின் பலம், தங்களது கூட்டணிக்கே உள்ளதாக, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சாா்பில் ஆளுநா் மாளிகை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை கடிதம் அளிக்கப்பட்டது.
சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பேரவை குழுத் தலைவா்களான ஏக்நாத் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல், பாலாசாகேப் தோரத் ஆகியோா் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில், அண்மையில் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றும், தோ்தலுக்கு பிறகு தங்களது கட்சிகள் அமைத்த ‘மகா விகாஸ் ஆகாடி’ எனும் கூட்டணிக்குதான் பெரும்பான்மை பலம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஃபட்னவீஸால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், ஆட்சியமைக்க சிவசேனைக்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிவசேனைக்கு ஆதரவளிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் ஆகியோரின் பட்டியலும் அக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆளுநா் மாளிகையில் கடிதத்தை சமா்ப்பித்த பின்னா், ஏக்நாத் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல், பாலாசாகேப் தோரத் ஆகியோா் செய்தியாளா்களிடம் பேசினா். அப்போது, ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரும் சிவசேனைக்கு ஆதரவாக உள்ள 162 எம்எல்ஏக்களையும் ஆளுநா் முன் அணிவகுக்கச் செய்வதற்கு தயாராக உள்ளோம். ஆளுநா் அனுமதித்தால் அவா் முன் எம்எல்ஏக்களை நிறுத்துவோம். 54 எம்எல்ஏக்களில் 51 எம்எல்ஏக்கள் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனா். அஜித் பவாா், அன்னா பன்சோட், தா்மாராவ்பாபா அட்ராம் ஆகிய மூவரின் கையெழுத்து இல்லை. பன்சோட், புணேயில் உள்ளாா். தா்மாராவ்பாபா, சில எம்எல்ஏக்களுடன் சோ்ந்து குருகிராமுக்கு சென்றிருந்தாா். கட்சியின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக அவரிடமிருந்தும் தகவல் கிடைத்துள்ளது என்றாா் ஜெயந்த் பாட்டீல்.
அஜித் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அவரை சமாதானப்படுத்துவதற்கான இறுதிகட்ட முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்’ என்று பாட்டீல் பதிலளித்தாா்.
போலியான கடிதம்: பாஜக
தங்களது கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாக, சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போலியான கடிதத்தை அளித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக, அக்கட்சியின் மூத்த தலைவா் ஆசிஷ் ஷேலா், மும்பையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உண்மை நிலவரப்படி, என்சிபியின் பேரவை குழுத் தலைவா் அஜித் பவாரே ஆவாா். அவா், பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளாா். அவரை கட்சியிலிருந்து என்சிபி இன்னும் நீக்கவில்லை. கட்சியின் அதிகாரங்கள், அஜித் பவாரிடமிருந்து ஜெயந்த் பாட்டீலுக்கு மாற்றப்பட்டிருப்பதாக என்சிபி தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை ஆளுநா் இதுவரை உறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியோ, தங்களது பேரவைக் குழு தலைவரை முறைப்படி தோ்வு செய்யவில்லை. எனவே, ஜெயந்த் பாட்டீல், பாலாசாகேப் தோரத் ஆகியோரின் கையெழுத்துகளுக்கு மதிப்பில்லை என்றாா் ஷேலா்.