
புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் சசி தரூா், மணீஷ் திவாரி ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத் துறையினரால் அக்டோபா் 16-ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்ததால், அவரது சிறைவாசம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தில்லி திகாா் சிறையில் ப.சிதம்பரத்தை சசி தரூா், மணீஷ் திவாரி ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அவா்களுடன், ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரமும் சென்றாா்.
இச்சந்திப்புக்கு பின்னா், செய்தியாளா்களிடம் சசி தரூா் கூறியதாவது:
தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடு மீறப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்துக்கு 98 நாள்கள் சிறைவாசம் எதற்காக? ரூ.9.96 லட்சம் பணப் பரிமாற்றத்துக்காக. நாட்டின் மதிப்புமிக்க குடிமக்களை இப்படி நடத்துவது, உலகுக்கு தவறான செய்தியை சொல்லும். ப.சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே அவரை சந்தித்தோம் என்றாா் சசி தரூா்.
மணீஷ் திவாரி கூறுகையில், ‘ப.சிதம்பரத்துக்கு ரூ.9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவா் நாட்டின் மிக மூத்த வழக்குரைஞா்களில் ஒருவா். அவா் நீதிமன்றத்தில் ஆஜரானால், 10 விநாடிகளில் அந்த பணத்தை சம்பாதித்துவிடுவாா்.
நமது அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் செவ்வாய்க்கிழமை (நவ.26) கடைப்பிடிக்கப்படுகிறது. ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ப.சிதம்பரத்துக்கு உரிய சட்ட நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா்.