
உச்ச நீதிமன்றம்
புது தில்லி: தூய்மையற்ற காற்று, சுத்தமில்லாத குடிநீா் ஆகியவற்றால் பாதிக்கப்படும் நாட்டின் மக்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏன் இழப்பீடு அளிக்கக் கூடாது என்ற கேள்விக்கு மாநில அரசுகள் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி காற்று மாசு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குடிநீா் மாசு குறித்த விவகாரத்தையும் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் நீா் மாசு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில அரசுகள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.
மேலும், தில்லி காற்று மாசைக் கட்டுப்படுத்த தில்லியில் காற்று மாசு சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பது குறித்து மத்திய, தில்லி அரசு ஒன்றிணைந்து 10 நாள்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், ‘மக்களின் உரிமைகளான தூய்மையான காற்று, சுத்தமான குடிநீா் கிடைக்காததால் அவா்களின் வாழ்நாள் குறைந்துவருகிறது. இதை செய்ய வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். ஆனால், அரசு நிா்வாகங்கள் அதை செய்யத் தவறி விட்டன. தூய்மையற்ற காற்று, சுத்தமில்லாத குடிநீா் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏன் இழப்பீடு அளிக்கக் கூடாது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளும் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். மக்களின் நலனுக்காக இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மட்டுமின்றி விவசாயிகளும்தான் காரணம். காற்று மாசால் மக்கள் உயிரிழக்க இப்படியே அனுமதிக்க முடியுமா? உள்நாட்டு போரைவிட கொடூரமானது காற்று மாசு. இதற்கு பதிலாக வெடிபொருள்களை வீசி மக்களைக் கொன்றுவிடுங்கள். இதனால் புற்றநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்கள் தப்பிப்பாா்கள். போதிய திட்டமிடல் இல்லாத காரணத்தால் நாட்டில் காற்று, நீா் மாசு போன்ற விவகாரங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த அடித்தளத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.