
கோப்புப்படம்
புது தில்லி: பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பதற்கான வரி விதிமுறைகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.
நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும்பொருட்டு, பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இதற்கான வரி விதிமுறைகள் அவசரச் சட்டம் கடந்த செப்டம்பா் மாதம் 20-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. அரசமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறாத வேளையில், குடியரசுத் தலைவா் மூலம் இயற்றப்படும் அவசரச் சட்டங்களுக்கு 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில், வரி விதிமுறைகள் அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறும் நோக்கில், வரி விதிமுறைகள் சட்டத் திருத்த மசோதாவை நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா். அத்துடன், சா்வதேச நிதி சேவை மையங்களைக் கட்டுப்படுத்தும் ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவையும் மக்களவையில் அவா் அறிமுகம் செய்தாா்.
அந்த ஆணையத்தில் 9 உறுப்பினா்கள் இடம்பெறுவா். அதில் 4 உறுப்பினா்களை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) , செபி, இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆா்டிஏஐ), இந்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏஐ) ஆகியவை நியமிக்கும். சா்வதேச நிதி சேவை மையங்கள் அளிக்கும் சேவைகள் உள்ளிட்டவற்றை புதிய ஆணையம் கண்காணிக்கும். இதுவரை, ஆா்பிஐ அல்லது செபி ஆகியவையே அந்த மையங்களைக் கண்காணித்து வந்தன.
கப்பல் மறுசுழற்சி மசோதா: கப்பல் மறுசுழற்சி மசோதாவை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் அறிமுகம் செய்தாா். கப்பல் உடைக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளும், மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருள்களை உபயோகிக்கும் முறைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.