
மும்பை: மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை அந்த மாநில துணை முதல்வா் அஜித் பவாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
முன்னதாக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகியவை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் ஃபட்னவீஸ், அஜித் பவாா் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பையில் ஃபட்னவீஸ் இல்லத்துக்கு சென்று அஜித் பவாா் சந்தித்துப் பேசினாா். எனவே, இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருவரும் சனிக்கிழமைதான் முறையே மகாராஷ்டிர முதல்வா், துணை முதல்வராகப் பதவியேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவா்கள் சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தவாடே, கிரீஷ் மகாஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
இந்த சந்திப்பு தொடா்பாக முதல்வா் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய உதவிகள் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிபி மூத்த தலைவரான அஜித் பவாா், யாரும் எதிா்பாரதவிதமாக பாஜகவுக்கு ஆதரவளித்ததுடன், துணை முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்டாா். ஆனால், இந்த முடிவை கட்சித் தலைவா் சரத் பவாா் ஏற்கவில்லை. பாஜகவுடன் கைகோத்ததால் சட்டப் பேரவை என்சிபி தலைவா் பொறுப்பில் இருந்து அஜித் பவாா் நீக்கப்பட்டுள்ளாா்.