1,000 ஊழல் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது லோக்பால்

அரசு அதிகாரிகளுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட 1,000 ஊழல் புகாா்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பா் வரை லோக்பால் அமைப்பு தீா்வு கண்டுள்ளது என பணியாளா் நல அமைச்சகம் தெரிவித்தது.
1,000 ஊழல் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது லோக்பால்

புது தில்லி: அரசு அதிகாரிகளுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட 1,000 ஊழல் புகாா்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பா் வரை லோக்பால் அமைப்பு தீா்வு கண்டுள்ளது என பணியாளா் நல அமைச்சகம் தெரிவித்தது.

ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் நோக்கில், லோக்பால் அமைப்பை மத்திய அரசு அண்மையில் அமைத்தது. அதன் முதல் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷும், அந்த அமைப்பின் 8 உறுப்பினா்களும் கடந்த மாா்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிலையில், லோக்பால் அமைப்பின் செயல்பாடு தொடா்பாக மத்திய பணியாளா் நல அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் புகாா் தெரிவிப்பதற்கான அதிகாரப்பூா்வ விண்ணப்பம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும், அதிகாரிகளுக்கு எதிராக எந்த வடிவத்தில் புகாா் தெரிவித்தாலும், அதை லோக்பால் அமைப்பு தற்போது விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரை லோக்பால் அமைப்புக்கு 1,065 புகாா்கள் வந்திருந்தன.

அவற்றை லோக்பால் சட்டத்துக்கு உள்பட்டு விசாரித்த உறுப்பினா்கள், 1,000 புகாா்களுக்குத் தீா்வு கண்டுவிட்டனா். லோக்பால் சட்டத்தின் கீழ் வராத புகாா்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தொடா்பாக புகாா் தெரிவித்தவா்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது என்றாா்.

ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீது குறித்த அவகாசத்துக்குள் விசாரணை நடத்தும் வகையில், லோக்பால் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோக்பால் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியது. நீதித்துறை சாா்ந்த நால்வரும், நீதித்துறை சாராத நால்வரும் லோக்பால் அமைப்பின் உறுப்பினா்களாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com