மகாராஷ்டிர காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பாலாசாஹேப் தோரட் தேர்வு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா உத்தரவிட்டதையடுத்து, இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பாலாசாஹேப் தோரட் தேர்வு

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக 105 தொகுதிகளையும், அதன் கூட்டணியில் இருந்த சிவசேனை 56 தொகுதிகளையும் கைப்பற்றின. எதிரணியில் தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன.

முதல்வர் பதவி மற்றும் சம அளவிலான அமைச்சர் பதவி உள்ளிட்டவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாஜகவை சிவசேனை நிர்பந்தித்ததை தொடர்ந்து, தேர்தலுக்குப் பின் இவ்விரு கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனால் அங்கு எந்த கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத காரணத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. 

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் 44 எம்எல்ஏ-க்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரான பாலாசாஹேப் தோரட், சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அக்கட்சி உறுப்பினர்களால் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா உத்தரவிட்டதையடுத்து, இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். பாலாசாஹேப் தோரட், தற்போது 8-ஆவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com