கூட்டணித் தலைவர் யார்? சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் இன்று மாலை ஆலோசனை

கூட்டணித் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளன. 
கூட்டணித் தலைவர் யார்? சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் இன்று மாலை ஆலோசனை

கூட்டணித் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் இணைந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளனர். அப்போது, கூட்டணித் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். 

மும்பையின் ஜே.டபள்யூ.மேரியட் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அசோக் சவான் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். 

அப்போது, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரான பாலாசாஹேப் தோரட், தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா உத்தரவிட்டதையடுத்து, இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். 

இதனிடையே, மும்பையின் சோஃபிடெல் சொகுசு விடுதியில் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃப்ரஃபுல் படேல், ஜெயந்த் படேல், சுப்ரியா சுலே, சக்கன் புஜ்பால், ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ரௌத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன்கிழமை மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் போது சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணித் தலைவர் தேர்வு செய்யப்படுவது மட்டுமல்லாமல், முதல்வர் வேட்பாளரும் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் கூட்டணித் தலைவராக சரத் பவார் மற்றும் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. துணை முதல்வராக சுப்ரியா சுலே பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்கு அப்பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மகாராஷ்டிர அரசியலில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. 

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை தேவேந்திர ஃபட்னவீஸ் எந்த விதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும். எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தரப்பில் புதிய மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com