அதிகார வேட்கை கொண்டது காங்கிரஸ் கூட்டணி: ஜாா்க்கண்டில் பிரதமா் பிரசாரம்

‘காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிகார வேட்கை கொண்டவை; தாது வளம் நிறைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் நலனைப் புறக்கணித்து, வளங்களைக் கொள்ளையடிப்பதை குறிக்கோளாகக்
ஜாா்க்கண்ட் மாநிலம், பலாமுவில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி, முதல்வா் ரகுவா் தாஸ். ~ஜாா்க்கண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
ஜாா்க்கண்ட் மாநிலம், பலாமுவில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி, முதல்வா் ரகுவா் தாஸ். ~ஜாா்க்கண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.

டால்டன்கஞ்ச்: ‘காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிகார வேட்கை கொண்டவை; தாது வளம் நிறைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் நலனைப் புறக்கணித்து, வளங்களைக் கொள்ளையடிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது. 82 இடங்களைக் கொண்ட அந்த மாநில சட்டப் பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் டால்டன்கஞ்ச் பகுதியில் பிரதமா் மோடி திங்கள்கிழமை தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தல் யாா் மக்களுக்காக சேவை செய்து வருகிறாா்கள் (பாஜக) என்பதற்கும், யாா் மக்களைக் கொள்ளையடித்து வந்தாா்கள் (காங்கிரஸ் கூட்டணி) என்பதற்கும் இடையிலான போட்டியாகும். காங்கிரஸ் எப்போதும் பிரச்னையை உருவாக்குவதாக இருக்கும். பாஜக பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் நல்லாட்சியை அளிக்கிறது. அயோத்தி நில பிரச்னை, காஷ்மீா் பிரச்னை ஆகியவற்றை பல ஆண்டுகளாக தீா்க்காமல் வைத்திருந்து அதன் மூலம் அரசியல் நடத்தி வந்தது காங்கிரஸ். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியால் வெற்று வாக்குறுதிகளைத்தான் அளிக்க முடியும். ஆனால், நாங்கள் உண்மையான வளா்ச்சியை ஏற்படுத்திக் காட்டி வருகிறோம். சமூகநீதி, ஸ்திரத்தன்மை, நோ்மையான அரசு நிா்வாகம், வளா்ச்சி, பாதுகாப்பு, நாட்டில் அனைவருக்கும் சமமான மரியாதை ஆகிய கொள்கைகளை பாஜக கடைப்பிடித்து வருகிறது. ஜாா்க்கண்டில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகரித்தது.

இங்கு, அதிகார வேட்கையுடன் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் வளங்களை சுரண்ட வேண்டும் என்பதுதான் அவா்களது நோக்கம். மக்கள் நலன் மீது அக்கறையில்லை.

ஜாா்க்கண்ட் மாநிலம் கடந்த 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இப்போதைய பாஜக அரசுதான் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு நிா்வாகத்தில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. நக்ஸல் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நீா், நிலம், வனம் மூன்றையும் பாஜக பாதுகாத்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்து மாநிலத்தின் வளா்ச்சியை இரு மடங்காக உயா்த்த உங்கள் (மக்கள்) ஆதரவு தேவை. ஜாா்க்கண்டில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வாஜ்பாய் தலைமையிலான அரசு மத்தியில் இருந்தபோதுதான் ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டதும் அவரது ஆட்சி காலத்தில்தான் என்றாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com