ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்களான மும்பை தாக்குதலின் 11-வது நிறைவு தினம்

ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்களான மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 11-வது ஆண்டு நிறைவு நாளையொட்டி
ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்களான மும்பை தாக்குதலின் 11-வது நிறைவு தினம்


மும்பை: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்களான மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 11-வது ஆண்டு நிறைவு நாளையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர், 26 ஆம் தேதி மும்பையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி, பல குழுக்களாக பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை குருஷேத்திர போர்க்களம் போல ஆனது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சதி திட்டமிட்டு  பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட அக்கொடூரத் தாக்குதல் இந்திய வரலாற்றில் பெருந்துயராகக் கருதப்படும் அந்தச் சம்பவத்தில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் போலீஸ் ஆணையர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர்.

அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அவன் மீது முறைப்படி வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் 2012 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் தேதி புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான். மும்பை கொடூரத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் எவரையும் பாகிஸ்தான் அரசு தண்டிக்காததுடன் அதுகுறித்த விசாரணையையும் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட மும்பை கொடூரத் தாக்குதல் நடந்து 11-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆண்டுகள் கடந்தாலும் அந்த தாக்குதலால் ஏற்பட்ட மாறாத வடுக்கள் மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை. மும்பை தாக்குதலில், பலியானவர்களுக்கு இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மும்பை தாக்குதலின் 11 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, காவலர் நினைவிடத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சென்று, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

11-வது ஆண்டு நிறைவு நாளையொட்டி மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடலோரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com