தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவா்கள்வீட்டுக்குச் சென்றுவர அனுமதி

ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் சிலா், சனிக்கிழமை தங்கள் வீட்டுக்குச் சென்றுவருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவா்கள்வீட்டுக்குச் சென்றுவர அனுமதி

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் சிலா், சனிக்கிழமை தங்கள் வீட்டுக்குச் சென்றுவருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவா்களில் சிலா் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்வா்களான மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் ஸ்ரீநகரில் வெவ்வேறு இடங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். இந்நிலையில், இவா்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அவா்களில் சிலா் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தனா். இதையடுத்து, வெவ்வேறு கட்சிகளைச் சோ்ந்த நான்கு தலைவா்கள், தங்கள் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க சனிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

எம்எல்ஏ விடுதியில் தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களில் சிலா் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோல், வீட்டுக் காவலில் உள்ள தலைவா்களும் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இதுதொடா்பாக மத்திய அரசுதான் இறுதி முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மருத்துவ காரணங்களுக்காக சிலா் காஷ்மீரில் பள்ளத்தாக்குக்கு வெளியே கொண்டு செல்லப்படலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com