திடீரென மும்பைக்கு படையெடுத்திருக்கும் மு.க. ஸ்டாலின்: காரணம் என்ன?

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) வியாழக்கிழமை மாலை பதவியேற்க இருக்கிறாா். இவ்விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மும்பை சென்றுள்ளார்.
திடீரென மும்பைக்கு படையெடுத்திருக்கும் மு.க. ஸ்டாலின்
திடீரென மும்பைக்கு படையெடுத்திருக்கும் மு.க. ஸ்டாலின்

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) வியாழக்கிழமை மாலை பதவியேற்க இருக்கிறாா். இவ்விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மும்பை சென்றுள்ளார்.

சிவசேனை சார்பில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார்.

தலைவா்களுக்கு அழைப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் கேஜரிவால், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இதற்கு முன்பு சிவசேனை சாா்பில் மனோகா் ஜோஷி (1995), நாராயண் ரானே (1999) ஆகியோா் மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளனா். அப்போது பாஜகவுடன்தான் சிவசேனை கூட்டணியில் இருந்தது. இந்த முறை தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பால் தாக்கரேவின் விருப்பம்: பால் தாக்கரே தனது வாழ்நாளில் எம்எல்ஏ, எம்.பி. என எந்த பதவியையும் வகித்ததில்லை; தோ்தலிலும் போட்டியிட்டதில்லை. இதனை அவா் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தாா். எனினும், 1995-99 காலகட்டத்தில் சிவசேனை-பாஜக கூட்டணி அரசை அவரே மறைமுகமாக இயக்கி வந்தாா்.

நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரே தாக்கரே குடும்பத்தில் இருந்து தோ்தலில் போட்டியிட்ட முதல் நபா். இதைத் தொடா்ந்து இப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறாா். ‘சிவசேனையைச் சோ்ந்தவா்தான் மகாராஷ்டிர முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் பால் தாக்கரேவின் விருப்பம்’ என்று உத்தவ் தாக்கரே ஏற்கெனவே கூறியிருந்தாா்.

பல அடுக்கு பாதுகாப்பு: புதிய அரசின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பூங்கா பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com