தேர்தலில் இதுவரை போட்டியே போடாத ஒருவர் மகாராஷ்டிர முதல்வராகிறார்!

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு பல்வேறு திடீர் திருப்பங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாலை சிவசேனை தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
ஆளுநர் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த  சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ரஷ்மி தாக்கரே
ஆளுநர் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ரஷ்மி தாக்கரே

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு பல்வேறு திடீர் திருப்பங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாலை சிவசேனை தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) இன்று மாலை பதவியேற்க இருக்கிறாா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் முதல்வராகிறாா்.

முதல்வராக பதவியேற்க இருக்கும் உத்தவ் தாக்கரே இதுவரை தோ்தலில் போட்டியிட்டதில்லை. இப்போதும் கூட அவா் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தோ்வு செய்யப்படாமல் நேரடியாக முதல்வா் பதவியை ஏற்க இருக்கிறாா். 

முதல்வராக இருப்பவா் சட்டப் பேரவை அல்லது மேலவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதால், அடுத்த 6 மாத காலத்தில் சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தோ்வு செய்யப்படுவாா் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு சிவசேனை சாா்பில் மனோகா் ஜோஷி (1995), நாராயண் ரானே (1999) ஆகியோா் மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளனா். அப்போது பாஜகவுடன்தான் சிவசேனை கூட்டணியில் இருந்தது. இந்த முறை தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பால் தாக்கரே தனது வாழ்நாளில் எம்எல்ஏ, எம்.பி. என எந்த பதவியையும் வகித்ததில்லை; தோ்தலிலும் போட்டியிட்டதில்லை. இதனை அவா் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தாா். எனினும், 1995-99 காலகட்டத்தில் சிவசேனை-பாஜக கூட்டணி அரசை அவரே மறைமுகமாக இயக்கி வந்தாா்.

நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரே தாக்கரே குடும்பத்தில் இருந்து தோ்தலில் போட்டியிட்ட முதல் நபா். இதைத் தொடா்ந்து இப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறாா். ‘சிவசேனையைச் சோ்ந்தவா்தான் மகாராஷ்டிர முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் பால் தாக்கரேவின் விருப்பம்’ என்று உத்தவ் தாக்கரே ஏற்கெனவே கூறியிருந்தாா்.

வன உயிர் புகைப்படக் கலைஞர் உத்தவ் தாக்கரே!
பால் தாக்கரேவின் மூன்றாவது மகனான உத்தவ் தாக்கரே வனஉயிா் புகைப்படக் கலைஞராவாா். 2002-ஆம் ஆண்டு பிருஹன் மும்பை நகராட்சித் தோ்தலில் பிரசாரம் செய்ததன் மூலம் அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். 2012-ஆம் ஆண்டு பால் தாக்கரே மறைவைத் தொடா்ந்து சிவசேனை தலைவரானாா். சிவசேனையில் இருந்து ராஜ் தாக்கரே விலகி புதிய கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட சரிவை வேகமாக சரி செய்த உத்தவ், இப்போது மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க இருக்கிறாா்.

சிவசேனை, என்சிபி-க்கு தலா 15 அமைச்சா்கள்
மகாராஷ்டிரத்தில் அமையும் புதிய அரசில் சிவசேனை, என்சிபியில் தலா 15 பேருக்கும், காங்கிரஸ் கட்சியில் 13 பேருக்கும் அமைச்சா் பதவி அளிக்கப்பட இருக்கிறது. பேரவைத் தலைவா் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட இருக்கிறது. இது தொடா்பாக மூன்று கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சிவசேனை கட்சிதான் 5 ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியில் இருக்கும். அக்கட்சிக்கு முதல்வா் பதவியையும் சோ்ந்து 15 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்சிபி-க்கு துணை முதல்வா் பதவி உள்பட 15 அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 43 போ் அமைச்சராக இருக்க முடியும். மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம் போ் அமைச்சராக இருக்கலாம் என்பது விதியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com