மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகூர் நீக்கம்

மத்திய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகூரை நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.
Pragya Thakur expelled from defence panel
Pragya Thakur expelled from defence panel


புது தில்லி : மத்திய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகூரை நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், அவர் அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகூரை நீக்குமாறு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா பரிந்துரை செய்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நாதுராம் கேட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா தாகூர் மக்களைவயில் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பேச்சு அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.

இந்த பேச்சினை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்டிருந்த பிரக்யா தாகூர் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேப்போல, பாஜக நடாளுமன்ற குழு கூட்டத்திலும் பிரக்யா தாகூரை பங்கேற்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் நட்டா தெரிவித்துள்ளார்.

நாதுராம் கோட்சே பற்றிய அவரது பேச்சில் உடன்பாடில்லை, அது கண்டனத்துக்குரியது என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சின் பின்னணி
நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா மீதான விவாதத்தில், தான் ஏன் மகாத்மா காந்தியை கொன்றேன் என்பது குறித்த கோட்சேவின் கருத்தை திமுக எம்பி ஆ. ராசா மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாகுர், "ஒரு தேச பக்தரை நீங்கள் உதாரணமாக அளிக்க முடியாது" என்றார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரக்யா தாகுரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக எம்பி-க்களும் பிரக்யா தாகுரை அமைதி காக்குமாறு வலியுறுத்தினர்.

இதன்பிறகு பேசிய ஆ. ராசா, அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டே பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களைக் கொண்டு அல்ல என்று கூறி மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com