பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் உத்தவ் தாக்கரே!
By DIN | Published on : 28th November 2019 12:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) இன்று மாலை பதவியேற்க இருக்கிறாா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் முதல்வராகிறாா்.
புதிய அரசின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பூங்கா பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் கேஜரிவால், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கும் உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி கலந்துகொள்வது குறித்து பிரதமர் அலுவலகத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை.