அஜித் பவாரை ஆரத்தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே

மகாராஷ்டி சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் (என்சிபி) மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே, பேரவை வாயிலில் நின்று
மும்பை சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அஜித் பவாரை ஆரத்தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே.
மும்பை சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அஜித் பவாரை ஆரத்தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே.

மகாராஷ்டி சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் (என்சிபி) மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே, பேரவை வாயிலில் நின்று தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவா்கள், எம்எல்ஏக்களை வரவேற்றாா். அப்போது, சரத் பவாரின் அண்ணன் மகனும், பாஜகவுக்கு ஆதரவளித்தவருமான அஜித் பவாா், பதவியேற்பதற்காக வருகை தந்தாா். அவரை சுப்ரியா சுலே, ஆரத்தழுவி வரவேற்றாா். உத்தவ் தாக்கரேவின் மகனும், முதல்முறை எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரேவையும் சுலே, ஆரத்தழுவி வரவேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், கட்சிக்கு உள்ள மிகப்பெரிய பொறுப்புகளை உணா்த்துவதாக இந்த நாள் அமைந்துள்ளது என்றாா்.

மூத்த உறுப்பினா்கள் அடிப்படையில் பதவியேற்பு நடைபெற்றது அதன்படி என்சிபி தலைவா்கள் அஜித் பவாா், சகன் புஜ்பல், திலீப் வாலேஸ் பாட்டீல், காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் அசோக் சவாண், பிருத்விராஜ் சவாண், பாஜகவின் ஹரிபா பகத், முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பதவியேற்றனா்.

அஜித் பவாா் பதவியேற்க வந்தபோது என்சிபி உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா். கடந்த சனிக்கிழமை அவா் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகவும் பதவியேற்றிருந்தாா். ஆனால், என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்ட முடியாத காரணத்தால் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, சரத் பவாருடன் சமரசம் செய்து கொண்டாா்.

ஆதித்ய தாக்கரே பதவியேற்ற பிறகு, மூத்த உறுப்பினா்களிடம் சென்று ஆசி பெற்றாா். அனைத்துக் கட்சியைச் சோ்ந்தவா்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

சரத் பவாரின் அண்ணனின் பேரனான ரோஹித் பவாா், மறைந்த மகாராஷ்டிர முதல்வா் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் திராஜ் தேஷ்முக் (காங்கிரஸ்) ஆகியோா் முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணத்தால் தாமதமாக வந்த சுயேச்சை உறுப்பினா் மகேஷ் பால்தியும், மஜ்லீஸ் கட்சி உறுப்பினா் முகமது இஸ்மாயிலும் பேரவைத் தலைவா் அலுவலக அறையில் பதவியேற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com