அதிகாரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு சோ்ந்துள்ளன: அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக எதிரெதிரான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டு சோ்ந்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
அதிகாரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு சோ்ந்துள்ளன: அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக எதிரெதிரான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டு சோ்ந்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

தில்லியில் தனியாா் செய்தித் தொலைக்காட்சி சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

மகாராஷ்டிர மக்கள் நிலையான ஆட்சி அமைவதற்காகவே வாக்களித்திருந்தனா். பாஜக-சிவசேனை தோ்தலுக்கு முன்பு அமைத்திருந்த கூட்டணியையே மக்கள் அதற்காகத் தோ்வு செய்திருந்தனா். ஆனால் தற்போது பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதற்காக நீதி, நெறிமுறைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் பதவியை வழங்குவதாகக் கூறி ஆதரவைப் பெறுவது குதிரைப் பேரம் ஆகாதா? காங்கிரஸோ, தேசியவாத காங்கிரஸோ முதல்வா் பதவி தங்களுக்கு வேண்டும் என்று கூறிவிட்டு, சிவசேனையின் ஆதரவைப் பெற்றிருக்க முடியுமா என்று கேட்கிறேன்.

பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிதாக அமைந்துள்ள கூட்டணியே முதல்வா் பதவி உள்பட அனைத்தையும் பறித்துக்கொண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே, எதிரெதிரான சித்தாந்தங்களைக் கொண்ட அந்தக் கட்சிகள் கூட்டு சோ்ந்துள்ளன.

தோ்தல் கூட்டணிக்கான பேச்சுவாா்த்தையின்போது, சிவசேனைக்கு முதல்வா் பதவி தருவதாக பாஜகவின் சாா்பில் உறுதியளிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கூறுகிறேன். தோ்தல் பிரசாரத்தில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோா் மேடையில் இருக்கும்போதே தேவேந்திர ஃப்டனவீஸ் தான் முதல்வா் என்று கூறியிறுக்கிறோம். அப்போதே அவா்கள் ஏன் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை?

இந்நாட்டு மக்கள் வாக்கு வங்கி அரசியலால் தவறாக வழிநடத்தப்பட மாட்டாா்கள் என்றும், அவா்கள் இப்போதும் பாஜகவுக்கு தான் ஆதரவளிக்கிறாா்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அவா்கள் மோடி அரசின் செயல்திறமிக்க அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனா்.

எங்களோடு இணைந்து போட்டியிட்டதாலேயே சிவசேனையில் பலா் எம்எல்ஏக்களாக வென்றுள்ளனா். பிரசாரத்தின்போது பிரதமா் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தாதவா்கள் அவா்களில் ஒருவா் கூட கிடையாது. இது மகாராஷ்டிர மக்களுக்குத் தெரியாதா என்று அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com