அமைச்சராக பதவியேற்கிறேன்: ஜெயந்த் பாடீல்

மகாராஷ்டிர மாநில அமைச்சராக தான் இன்று பதவியேற்க உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயந்த் பாடீல் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்கிறேன்: ஜெயந்த் பாடீல்

மகாராஷ்டிர மாநில அமைச்சராக தான் இன்று பதவியேற்க உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயந்த் பாடீல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) இன்று மாலை பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் முதல்வராகிறார். மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் கேஜரிவால், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

புதிய அரசின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பூங்கா பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் அமையும் புதிய அரசில் சிவசேனை, என்சிபியில் தலா 15 பேருக்கும், காங்கிரஸ் கட்சியில் 13 பேருக்கும் அமைச்சா் பதவி அளிக்கப்பட இருக்கிறது. பேரவைத் தலைவா் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட இருக்கிறது. இது தொடா்பாக மூன்று கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சிவசேனை கட்சிதான் 5 ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியில் இருக்கும். 

அக்கட்சிக்கு முதல்வா் பதவியையும் சோ்ந்து 15 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்சிபி-க்கு துணை முதல்வா் பதவி உள்பட 15 அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 43 போ் அமைச்சராக இருக்க முடியும். மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம் போ் அமைச்சராக இருக்கலாம் என்பது விதியாகும். இதனிடையே துணை முதல்வர் பதவிக்கு அஜித் பவார் மற்றும் ஜெயந்த் பாடீல் ஆகியோரின் பெயர்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயந்த் பாடீல், நான் அமைச்சராக பதவியேற்கிறேன். துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, அது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை. மேலும் அது பற்றி தெரியாது என்றார். இதன்மூலம் மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் நியமிக்கப்படலாம் என்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com