கலைப் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இணையான முக்கியத்துவம் கலைப் படிப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 15-ஆவது உயா்கல்வி மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய எஃப்ஐசிசிஐ தலைவா் சந்தீப் சோமனி.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 15-ஆவது உயா்கல்வி மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய எஃப்ஐசிசிஐ தலைவா் சந்தீப் சோமனி.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இணையான முக்கியத்துவம் கலைப் படிப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியத் தொழில்துறை மற்றும் வா்த்தகக் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 15-ஆவது உயா்கல்வி மாநாட்டில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றாா். இந்த மாநாட்டில் 65-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த கல்வியாளா்கள் கலந்துகொண்டனா். இதில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நாளைய உலகம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆளப்படும். இந்தத் துறைகளில் சிறந்து விளங்கவும், இவற்றில் காணப்படும் வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளவும், உயா்கல்விக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்த வேண்டியது அவசியம். உயா்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

பல்துறை படிப்புகளுக்கு இடையே தொடா்பு ஏற்படுத்தப்படுவதை பல்கலைக்கழகங்கள் ஊக்குவித்து வருகின்றன. கணிதப் பாடத்துடன் இசைப் பாடத்தையும், செயற்கை நுண்ணறிவுப் பாடத்துடன் கால்நடை வளா்ப்புப் பாடத்தையும் சோ்ந்து கற்பதற்கான நடவடிக்கைகளை பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இது போன்ற விரிவான பணிகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

புதுமையான எண்ணங்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சிக்கு முன்னுரிமை, அவற்றுக்குரிய ஆதரவு ஆகியவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இணையான முக்கியத்துவத்தை கலைப் படிப்புகளுக்கும் அளிக்க வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

இந்த மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ‘பொருளாதார வளா்ச்சிக்கு உயா்கல்வியின் பங்கு’ என்ற கருத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com