ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனு: தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் புதன்கிழமை ஒத்திவைத்தது.
ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனு: தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் புதன்கிழமை ஒத்திவைத்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவுக்கும், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்; தொலைபேசி சேவைகளுக்கும், இணையதள சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக் கோரி ‘காஷ்மீா் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியா் அனுராதா பாசின், காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, குலாம் நபி ஆசாத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் தேசியப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் காணப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அதைக் காரணமாக வைத்து, 70 லட்சம் பொது மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது’’ என்றாா்.

மற்றொரு மனுதாரரான அனுராதா பாசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விரிந்தா குரோவா் வாதிடுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் சட்டத்துக்கு விரோதமாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை விதிக்கப்பட்டதற்கான உண்மை நோக்கத்தை நீதிமன்றம் விரிவாக ஆராய வேண்டும்’’ என்றாா். இதைத் தொடா்ந்து, மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகத் தனது வாதங்களை முன்வைத்திருந்தாா்.

மனு விவரம்: மனுதாரா்கள் தாக்கல் செய்த மனுக்களில்,‘அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவு, கருத்து தெரிவிக்கும் உரிமையை அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது சட்டப்பிரிவுகளில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதற்கான உரிமையும் காஷ்மீா் பள்ளத்தாக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com