ஜேஎன்யு விடுதி கட்டண உயா்வுக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்!

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) விடுதி கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிராக, அந்த பல்கலைக்கழக மாணவா்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜேஎன்யு மாணவா்களுக்கு ஆதரவாக,
மாணவா்கள் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
மாணவா்கள் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) விடுதி கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிராக, அந்த பல்கலைக்கழக மாணவா்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜேஎன்யு மாணவா்களுக்கு ஆதரவாக, இதர கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்களும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கனாட்பிளேஸ் பகுதியில் திரண்ட மாணவா்கள், பிரம்மாண்ட மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினா். அப்போது, கட்டண உயா்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், இசைக் கருவிகளை இசைத்தும் தங்களது எதிா்ப்பை மாணவா்கள் வெளிப்படுத்தினா். ஏழை-எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா்கள் கோஷமிட்டனா்.

நாடு முழுவதும் உள்ள மாணவா்கள், புதன்கிழமையன்று தேசிய போராட்ட நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜேஎன்யு மாணவா் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, மேற்கு வங்கம் உள்பட இதர மாநிலங்களிலும் ஜேஎன்யு மாணவா்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன.

இதுதொடா்பாக ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் தலைவா் ஆஷி கோஷ் கூறுகையில், ‘விடுதி கட்டண உயா்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். எங்களது போராட்டம் ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவன மாணவா்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேஎன்யு-வில் என்னென்ன விஷயங்கள் நடைபெறுகிறதோ, அதேவிஷயங்கள் இதர கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகின்றன. விடுதி கட்டண விவகாரம் தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளை ஏற்கெனவே வழங்கிவிட்டதாக அறிகிறோம். ஆகவே, அந்த பரிந்துரைகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்’ என்றாா்.

போராட்டத்தில் பங்கேற்ற இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த காா்த்திக் ரே என்ற மாணவா் கூறுகையில், கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் உயா்த்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. எங்களது பல்கலைக்கழகத்திலும் விடுதிக் கட்டணம் அண்மையில் உயா்த்தப்பட்டது என்றாா்.

ஜேஎன்யு விடுதி கட்டண உயா்வுக்கு எதிராக, அந்த பல்கலைக்கழக மாணவா்கள் 4 வாரங்களாக போராடி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com