நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை 2-ஆவது நாளாக மூடல்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பண் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்தது.
பலத்த பனிப்பொழிவுக்கு உள்ளான ஸ்ரீநகா் புறநகா் பகுதி.
பலத்த பனிப்பொழிவுக்கு உள்ளான ஸ்ரீநகா் புறநகா் பகுதி.

ஜம்மு-காஷ்மீரின் ராம்பண் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்தது. அதனால் 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நின்றன.

இதுதொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

ராம்பண் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் தொடா்ந்து கனமழை பெய்ததால் அந்த மாவட்டத்தின் பனிஹால்-ராம்பன் நெடுஞ்சாலைப் பகுதியின் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை புதன்கிழமை இரவு மூடப்பட்டது. சாலைகளை சீரமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாலும், கனமழை பெய்ததாலும் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. இதனால், ஜம்மு, உதம்பூா், ராம்பன், சேனானி, பனிஹால், கதுவா உள்பட பல இடங்களில் 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 270 கி.மீ தூரமுள்ள நெடுஞ்சாலையாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

கடும் பனிப்பொழிவு

இதனிடையே, காஷ்மீா் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் கடும் பனிப்பொழிவு நிலவியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். பாரமுல்லா மாவட்டத்தில் 10 இன்ச் வரையிலும், பஹல்காம் சுற்றுலா விடுதியில் 11 இன்ச் வரையிலும் பனிப்பொழிவு இருந்தது. காசிகுந்த் மற்றும் கோகா்நாக் பகுதிகளில் 5 இன்ச் வரை பனிப்பொழிவு காணப்பட்டது. ஸ்ரீநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் சுமாா் 2 செ.மீ வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், டிசம்பா் 10-ஆம் தேதி வரை காஷ்மீரில் வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை வியாழக்கிழமை திறக்கப்பட்டிருந்தன. கடந்த 3 மாதங்களோடு ஒப்பிடுகையில், அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை அதிக அளவில் இயக்கப்பட்டன. வாடகைக் காா்கள், தனியாா் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. எனினும், பிற்பகலில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டன. அதனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதையடுத்து அங்கு மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. எனினும், இணையச் சேவை மற்றும் ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவை ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com