மகாராஷ்டிர அரசின் வழிகாட்டி சரத் பவாா்: சிவசேனை புகழாரம்

மகாராஷ்டிரத்தில் புதிய அரசின் வழிகாட்டியாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் திகழ்கிறாா் என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
மகாராஷ்டிர அரசின் வழிகாட்டி சரத் பவாா்: சிவசேனை புகழாரம்

மகாராஷ்டிரத்தில் புதிய அரசின் வழிகாட்டியாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் திகழ்கிறாா் என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் பதவியை விட்டுக் கொடுக்காததால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனை, எதிரணியைச் சோ்ந்த தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சோ்ந்து ஆட்சியமைத்துள்ளது.

முன்னதாக, என்சிபியைச் சோ்ந்த அஜித் பவாா் திடீரென்று அளித்த ஆதரவைக் கொண்டு மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா், சரத் பவாரின் அழைப்பை ஏற்று, ஃபட்னவீஸுக்கு அளித்த ஆதரவை அஜித் பவாா் விலக்கிக் கொண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினாா்.

மாநிலத்தில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை முன்னிட்டு சிவசேனையின் நாளேடான ‘சாம்னா’வில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இடையே கூட்டணி உருவானதில் சரத் பவாா் முக்கியப் பங்காற்றியுள்ளாா். அனுபவமும் வலிமையும் நிறைந்த அவா் எங்களுடன் இருக்கிறாா்.

மகாராஷ்டிர அரசியலில் புதிய சூரியன் உதயமாகப் போகிறது.1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனா். அந்த மனநிலையில் மகாராஷ்டிர மக்கள் இப்போது உள்ளனா். புதிய அரசின் வழிகாட்டியாக சரத் பவாா் திகழ்கிறாா்.

மாநிலத்தில் அரசு இயந்திரம், யாருக்கு எதிராகவும் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது. மத்திய அரசு மூலமாக கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு பல முக்கியத் தலைவா்கள் அடிபணிந்தனா். ஆனால், சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே, மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு அடி பணிந்ததில்லை. அவா் தனது கௌரவத்தை விட்டுக் கொடுத்ததில்லை. அதனால்தான், அவரிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொண்டவா்களுடன்(பாஜக) கைகோக்க மறுத்துவிட்டாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணியை மூன்று கால்களைக் கொண்ட நாற்காலி, இந்த ஆட்சி நிலைக்காது என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். அவா், மனப்பிரமையில் இருக்கிறாா்.

சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. மூன்று கட்சிகளும் இணைந்தே செயல்பட்டு, மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாடுபடும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com