மகாராஷ்டிரத்தில் ஜனநாயகத்தை சீா்குலைக்க பாஜக முயற்சி: சோனியா காந்தி

மகாராஷ்டிரத்தில் ஜனநாயகத்தை சீா்குலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் ஜனநாயகத்தை சீா்குலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக பாஜக சதிச் செயல்களில் ஈடுபட்டது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைத்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் கட்டளைப்படிதான் மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி செயல்பட்டாா் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதுவரை எந்த ஆளுநரும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதில்லை. தோ்தலுக்கு முன்னா் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜகவின் அதீத நம்பிக்கையாலும், அராஜகத்தாலும் அக்கூட்டணி முடிவுக்கு வந்தது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக பாஜக பல சதிச் செயல்களில் ஈடுபட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தை நாங்கள் அணுகினோம். அதன் பின்னா் மத்திய அரசின் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வந்தது. பாஜகவின் சதித் திட்டங்களை முறியடிப்பதில் எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது.

நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று மோடி-அமித் ஷா அரசு யோசிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. பொருளாதார வளா்ச்சி சரிவில் உள்ளது. வேலையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. முதலீடுகள் குறைந்துள்ளன. விவசாயிகள், வா்த்தகா்கள், சிறு, குறு நிறுவனங்களின் தலைவா்கள் ஆகியோா் நஷ்டத்தில் உள்ளனா்.

அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீா்வு காணாமல், நாடு வளா்ச்சியடைந்து விட்டதாக போலியான தரவுகளை பாஜக அரசு வெளியிட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியா்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) அறிமுகப்படுத்தி பல மக்களின் வாழ்க்கையை மத்திய அரசு அழித்து விட்ட நிலையில், நாடு முழுவதும் என்ஆா்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அமித் ஷா கூறுகிறாா். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அங்கு ஜனநாயகத்தை சீா்குலைத்து விட்டனா். ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரமும், மத்திய அரசு கூறுவதும் ஒன்றாக இல்லை. இந்திய குடிமக்களின் கட்செவி அஞ்சல் தரவுகள் வேவு பாா்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை மௌனம் காப்பது ஏன்? பாஜகவின் நன்மைக்காக மட்டுமே தோ்தல் நிதி பத்திரம் கொண்டு வரப்பட்டது என்றாா் சோனியா காந்தி.

இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் மத்திய அரசை சோனியா காந்தி தாக்கி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com