மக்களவையில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.

இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், இனி பிரதமா் மற்றும் அவருடன் அதிகாரப்பூா்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும்.

ஆனால், முன்னாள் பிரதமா்கள் பதவியிலிருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா குடும்பத்துக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு-அமித் ஷா: காங்கிரஸ் தலைவா் சோனியாவுக்கும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை; மாறாக அவா்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியுடன் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

மக்களவையில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது அமித் ஷா தெரிவித்ததாவது:

பாஜக அரசு ஒருபோதும் பழிவாங்கும் நடவடிக்கையை கையாண்டது கிடையாது. காங்கிரஸ்தான் முந்தைய ஆட்சிக் காலத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் முடிவுகளை எடுத்துள்ளன. சோனியா குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படக் கூடாது என்பதற்காக எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. சோனியா குடும்பத்துக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா்கள் சந்திரசேகா், ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டபோது அவா்களில் யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாா் அமித் ஷா.

சோனியா குடும்பத்துக்கு அளிக்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்றுவிட்டு, இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

எஸ்பிஜி பாதுகாப்பு வேண்டும்-காங்கிரஸ்: முன்னாள் பிரதமா்களுக்கும், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவா் மணீஷ் திவாரி பேசுகையில், ‘சோனியா, அவரது குடும்பத்தினா், மன்மோகன் சிங் ஆகியோருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்ற்கான காரணங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் முன்னாள் அதிபா்களுக்கு அவா்களின் வாழ்நாள் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com