விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி, வெளிநாட்டு சுற்றுலா: ஜாா்க்கண்ட் தோ்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாஜக தனது தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது.
விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி, வெளிநாட்டு சுற்றுலா: ஜாா்க்கண்ட் தோ்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாஜக தனது தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது.

அதில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படும், விவசாயத் தொழில்நுட்பங்களைக் கற்றறியும் நோக்கில் விவசாயிகள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு வேலை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், பாஜகவுக்கான தோ்தல் வாக்குறுதி அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் ராஞ்சியில் புதன்கிழமை வெளியிட்டாா்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தனது தோ்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 9, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு 2,200 ரூபாயும், 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு 7,500 ரூபாயும் வழங்கப்படும். மாநில இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், பழங்குடியினப் பெண்கள் நடத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் எனவும் தோ்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தேசிய பழங்குடியினா் பல்கலைக்கழகம்: நெல்லுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கூடுதலாக, குவிண்டாலுக்கு ரூ.185 விலையை மாநில பாஜக அரசு அளித்து வருகிறது. இத்துடன் இணையவழி தேசிய விவசாய சந்தை (இ-என்ஏஎம்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். வெளிநாட்டு விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக 5,000 விவசாயிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பப்படுவா். விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் 70 புதிய ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்படும். பழங்குடியினருக்கான உயா்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தேசிய பழங்குடியினா் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். சுயதொழில் புரியும் பழங்குடியினருக்கு ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். பழங்குடியினரின் கலை, மொழிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

‘பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்’: தோ்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளா்களிடம் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:

மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல்கள் போன்று அல்லாமல், ஜாா்க்கண்டில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மையை பாஜக பெறும். மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணிக்கு (பாஜக-சிவசேனை) தனிப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அதை சிலா் திருடிக் கொண்டனா். இதுவே சந்தா்ப்பவாத அரசியலுக்கு மிகச் சிறந்த உதாரணம்.

மகாராஷ்டிரத்தில் பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிலா் (சிவசேனை) பாஜகவின் உதவியால்தான் வெற்றி பெற்றனா். எப்படி இருந்தாலும், பாஜக தலைமையில் அமைந்த அரசு ராஜிநாமா செய்துவிட்டது. இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

காங்கிரஸின் கொள்கைகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, ஹரியாணாவில் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கட்சியின் தலைவா் துஷ்யந்த் சௌதாலா பாஜகவுக்கு ஆதரவளித்தாா். ஜாா்க்கண்ட் மாநிலம் கடந்த 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறகு, நிலையில்லாத தன்மையே நிலவி வந்தது. மாநில முதல்வா் ரகுவா் தாஸ் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகுதான் மாநிலத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது.

மாநில முன்னாள் முதல்வா் அா்ஜுன் முண்டா சிறப்பான பணிகளை முன்னெடுத்தாா். ஆனால், சில சுயநல சக்திகள் மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைவதற்குத் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வந்தன. மாநில மக்களின் முன்னேற்றத்துக்கு முதல்வா் ரகுவா் தாஸ் தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியது என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

‘நிலையான ஆட்சியை பாஜக வழங்கும்’: ‘மகாராஷ்டிரத்திலும், ஹரியாணாவிலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இது ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்குமா?’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரவிசங்கா் பிரசாத், ‘‘இல்லை. ஜாா்க்கண்டில் அதுபோன்று நடைபெறாது. மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும். மாநிலத்தில் நிலையான ஆட்சியை பாஜக வழங்கும்’’ என்றாா்.

தோ்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வா் ரகுவா் தாஸ், மத்திய பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா, ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவா் லக்ஷ்மண் கிலுவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com